ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மற்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பிசிசிஐ வைபவ் சூரியவன்சியை பாதுகாக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இரண்டு குறிப்பிட்ட வீரர்களின் வாழ்க்கை போல அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை கெட்டுவிடும் என எச்சரித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்தியா தாண்டி உலகளவில் கவனிக்கப்பட்ட வீரராக 14 வயதான சிறுவன் வைபவ் சூரியவன்சி மாறி இருக்கிறார். அவருடைய அபாரமான பேட்டிங் திறமையின் காரணமாக அவருக்கு இந்த வயதிலேயே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. 35 பந்தில் சதம் என்பதை இந்த வயதில் கற்பனை கூட செய்ய முடியாது என்பதால், அவருக்கு பல இடங்களிலிருந்து பாராட்டு பரிசுகள் குவிகிறது.
சச்சினின் வாழ்க்கை வரலாறு
சச்சின் தன்னுடைய 16ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போதே அவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய புகழ் கிடைத்தது. இதன் காரணமாக பணமும் குவிய ஆரம்பித்தது. இதே நேரத்தில் இவருடைய நண்பரான வினோத் காம்பளிக்கும் புகழ் மற்றும் பணம் குவிய தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்ததுமே இரண்டு இரட்டை சதங்களை அடித்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார்.
இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் சச்சின் நிதானமாகவும் ஒழுக்கமாகவும் முன்னேறிக் கொண்டிருக்க, வினோத் காம்ப்ளி திடீர் புகழ் பணத்தை என்ன செய்வது என தெரியாமல் தவறான வழியில் செல்ல ஆரம்பித்தார். இதனால் கிரிக்கெட் வாழ்க்கை மட்டும் இல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாகியது. இவருடைய இன்னொரு ஜெராக்ஸ் ஆக தற்போது பிரிதிவி ஷா இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து பேசி இருக்கும் கிரேக் சேப்பல் கூறும்பொழுது “சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறுவனாக கிரிக்கெட்டில் இங்கு வெற்றி பெற்றதற்கு மிகவும் முக்கிய காரணம் திறமை மட்டுமே கிடையாது. அவருக்கு ஒரு நல்ல ஆதரவு அமைப்பு இருந்தது. அவருக்கு நல்ல ஒழுக்கமான பயிற்சியாளர் மற்றும் சர்க்கஸ் போன்ற அமைப்பில் இருந்து காப்பாற்ற நல்ல குடும்பம் ஆகியவை இருந்தது. சச்சினுக்கு கிடைத்த எல்லாமே காம்ப்ளிக்கு கிடைத்தது. அவற்றை எப்படி பாதுகாத்து தக்க வைப்பது என்பதில் அவர் போராடினார்”
இதையும் படிங்க : சிஎஸ்கே மேட்ச் தோற்க.. இப்படியும் ஒரு காரணம் இருக்கா.. தோனிக்கு அதிர்ஷ்டம் அமையுமா?.. ஆச்சரிய தகவல்
“பிசிசிஐ மற்றும் மீடியாக்கள் சூரியவன்சியை தாறுமாறாக சந்தைப்படுத்தி அவரைச் சுரண்டக்கூடாது. அவரை பொறுமையாக சரியாக பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும். சிறிய வயதில் பெரிய பணம் மற்றும் புகழ் வாழ்க்கையை திசை மாற்றி விடக்கூடாது. இவருடைய வாழ்க்கை காம்ப்ளி மற்றும் பிரிதிவி ஷா போல மாறிவிடாமல் பிசிசிஐ சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.






