நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
குஜராத் கொல்கத்தா மோதல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த சாய் சுதர்சன் மற்றும் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. இதில் அற்புதமாக விளையாடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் கில் உடன் அதிரடியாக விளையாட இந்தக் கூட்டணி 33 பந்துகளில் 58 ரன்கள் குவித்தது.
இறுதியில் அணியின் கேப்டன் கில் 55 பந்துகளை எதிர் கொண்டு 90 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஜாஸ் பட்லர் 23 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரியுடன் 41 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது.
முதல் இடத்தில் குஜராத் அணி
தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கிய நிலையில் குர்பாஸ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரகானே ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் சுனில் நரேன் 17 ரன், வெங்கடேஷ் அய்யா 19 பந்துகளில் 14 ரன், ரிங்கு சிங் 14 பந்துகளில் 17 ரன், ஆல் ரவுண்டர் ரசல் 15 பந்துகளில் 21 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற இறுதி கட்டத்தில் ரகுவன்சி 13 பந்துகளில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 27 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:கில்லுக்கும் எனக்கும் தொடர்ந்து சாதனை பார்ட்னர்ஷிப் அமைய இந்த விஷயம்தான் காரணம் – சாய் சுதர்சன் கருத்து
மறுமுனையில் ரகானே 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவித்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலமாக 6வது வெற்றியை பெற்றுள்ள குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக இருக்கிறது. மேலும் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சன் வசமும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான ஊதா தொப்பி பிரசித் கிருஷ்ணா வசமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.






