ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 38வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சிஎஸ்கே மும்பை மோதல்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கேவில் ராகுல் திருப்பாதிக்கு பதிலாக 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவிந்த்ரா இன்னிங்ஸ் தொடங்க ரச்சின் 5 ரன்களில் நடையை கட்டினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஆயுஷ் 15 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் குவித்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினார். அதற்குப் பிறகு மும்பை பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே வீரர்களை கட்டுப்படுத்த, ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்கள் மற்றும் சிவம் தூபே 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
ரோஹித் சூர்யா அபாரம்
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. அதன் தொடக்க வீரர்கள் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா ஜோடி இந்த முறை மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். 6.4 ஓவர்களில் 63 ரன்கள் குவித்திருந்தபோது ரிக்கல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு ரோஹித் மற்றும் சூர்யா கூட்டணி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது.
இதையும் படிங்க:ரகசியத்தை சொல்லி தோனியை மாட்டி விட்ட சிவம் துபே.. வச்சு செய்த ஹர்திக்.. ரசிகர்கள் விமர்சனம்
33 பந்துகளில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா, ஒரு முனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சூரிய குமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். முடிவில் இந்த இருவர் கூட்டணி ஆட்டமே இழக்காமல் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 45 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 75 ரன்கள், சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 68 ரன்கள் குவித்தார். மும்பை அணிக்கு தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் தங்களது சொந்த மண்ணில் வெற்றி வெற்றி மும்பை அணி அதற்கு பழி தீர்த்துக் கொண்டது.






