தற்போது நடைபெற்று முடிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 24-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் தோல்வி அடைந்த விதம் குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பெங்களூர் அணி தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் ஆர்சிபி விளையாடியதை பார்த்தால் நிச்சயமாக 200 ரன்களுக்கு மேல் கடந்து விடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகள் பறி கொடுத்ததால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய முடியாமல் போனது. இந்த அணியில் பில் சால்ட் அதிகபட்சமாக 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுகள் விரைவிலேயே ஆட்டம் இழந்தாலும் கேஎல் ராகுல் ஒரு பக்கம் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரோடு ஸ்டெப்ஸ் ஜோடி சேர இந்த ஜோடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தது. இதில் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 53 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.
தோல்விக்கான காரணம் குறித்து ஆர்சிபி கேப்டன்
பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் பட்டிதார் கூறும் போது “நாங்கள் இந்த ஆடுகளத்தை பார்த்த விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று நினைத்தேன். இது பேட்டிங் செய்ய ஒரு அருமையான ஆடுகளம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிக தன்னம்பிக்கையோடு இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு பேட்டரும் நல்ல மனநிலையில் சீரான நோக்கத்தை காட்டினார்கள்.
இதையும் படிங்க:93 ரன்.. 6 சிக்ஸ்.. ஒற்றை ஆளாய் போட்டியை மாற்றிய கேஎல் ராகுல்.. சொந்த மண்ணில் ஆர்சிபி மோசமான சாதனை.. டெல்லி அபார வெற்றி
ஆனால் 80 ரன்களில் ஒரு விக்கெட் இழந்த நிலையில், 90களில் 4 விக்கெட் இழந்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். நாங்கள் நிலைமைகளை மதிப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை இருந்தாலும் அதனை மதிப்பிட்டு விளையாடுவது மிகவும் அவசியம். டிம் டேவிட் வேகத்தை அதிகரித்த விதம் அற்புதமானது. பவர் பிளேவில் எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி சூழ்நிலையை எளிதாக வைத்திருக்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.






