நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சாதனைப் பந்துவீச்சை செய்த அஸ்வானி குமார் போட்டிக்கு முன்பாக எப்படி தயாராகினார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் நேற்று மூன்று ஓவர்கள் பந்து வீசிய அஸ்வானி குமார் 24 ரன்கள் கொடுத்து கொல்கத்தா அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
மும்பை இந்தியன்ஸ் புதிய கண்டுபிடிப்பு
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இதுவரையில் அந்த மாநில அணிக்காக இரண்டு முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். பஞ்சாபில் நடைபெறும் ஒரு டி20 லீக்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வந்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் திறனறியும் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இந்த தொடரில் இதுவரையில் இவர் இல்லாமல் விக்னேஷ் புத்தூர் மற்றும் ராபின் மின்ஸ் என இரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்திய அணிக்காக விளையாடாத உள்நாட்டு வீரர்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்து இந்த ஆண்டு மூன்று போட்டிகளில் மூன்று வீரர்களை களம் இறக்கி மும்பை இந்தியன்ஸ் திறனறியும் குழு கலக்கியிருக்கிறது.
வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டேன்
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அறிமுக இந்திய பந்துவீச்சாளராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையைப் படைத்த அஸ்வானி குமாரிடம் இந்த சாதனை பந்துவீச்சுக்கு முன்பாக மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று ரவி சாஸ்திரி நகைச்சுவையாக கேள்வி கேட்டார்.
இதையும் படிங்க: சாதனை பவுலிங்.. போட்டிக்கு முன்பு வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டேன்.. காரணம் இதுதான் – அஷ்வானி குமார் பேட்டி
இதற்கு பதிலளித்துள்ள அஸ்வானி குமார் ” நான் போட்டிக்கும் முன்பாக வெறும் வாழைப்பழம் மட்டுமே மதியம் சாப்பிட்டேன். காரணம் எனக்கு முதல் போட்டி என்பதால் நிறைய அழுத்தமாக இருந்தது. இதனால் எனக்கு பசி எடுக்கவில்லை. அதே சமயத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்னிடம் எப்பொழுதும் இருக்கும் படியே இருக்க கூறினார். நானும் அப்படி இருக்கவே பெரிய அளவில் முயற்சி செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.






