இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஏன் மிகச் சிறந்தவராக இருக்கிறார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மிக விளக்கமாக பேசியிருக்கிறார்.
தற்போது நடந்து முடிந்த சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் தொடரை வென்றது. இதில் இறுதிப் போட்டியில் தொடரை வெல்வதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது. இதன் காரணமாக அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால்தா ரோஹித் சிறந்த கேப்டன்
தற்போது இந்திய கிரிக்கெட்டில் அதிகபட்சமாக மூன்று ஐசிசி தொடர்களை வென்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் இரண்டு ஐசிசி தொடர்களை வென்று ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறார். அடுத்த இரண்டு வருடங்கள் அவர் கேப்டனாக நீடித்தால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவத்தில் அவருக்கு இரண்டு ஐசிசி தொடர்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தோனி சாதனையை சமன் செய்யலாம்.
இதுகுறித்து வீரேந்திர சேவாக் பேசும் பொழுது “நாம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக அதிக ஐசிசி தொடர்களை வென்றதில் தோனிக்கு அடுத்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவர் தனது பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அணியை வழிநடத்திய விதம், மேலும் அவர் வீரர்களுடன் என்ன தொடர்பு செய்தாலும் அதை சிறப்பாக செய்கிறார். இதனால்தான் அவர் சிறந்த கேப்டனாக இருக்கிறார்”
இங்கு இதுதான் முக்கியமானது
“அர்ஸ்தீப் சிங்குக்கு முன்பாக ஹர்ஷித் ராணா விளையாடினாலும், பிறகு அவரை கழட்டி விட்டு அவருடைய இடத்திற்கு வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தாலும், எல்லாம் மிகச் சிறப்பாகவே சென்றது. ஏனென்றால் அவர் வீரர்களிடம் நல்ல தொடர்பை வைத்திருக்கிறார். எனவே அவர்களுக்கு தான் ஏன் விளையாடுகிறோம் விளையாடவில்லை என்பது குறித்து நல்ல தெளிவை ஏற்படுத்துகிறார். இதுதான் இங்கு மிகவும் முக்கியமானது”
இதையும் படிங்க : எங்க பேட்ஸ்மேன்ஸ் பாகிஸ்தான்ல ஆட விரும்புவாங்க.. இது உண்மைதான் – கம்பீர் வெளியிட்ட தகவல்
“மேலும் அவர் தன்னை பற்றி குறைவாகவும் அணியை பற்றி அதிகமாகவும் நினைக்கிறார். தன் வீரர்களுக்கு அவர் எப்பொழுதும் வசதியாக இருக்க விரும்புகிறார். அணியில் பாதுகாப்பு இன்மை இருந்தால் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்காது என்று அவருக்கு தெரியும். எனவே அவர் விளையாடாத வீரர்களையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார். எங்கு சென்றாலும் அவர்களையும் அழைத்துச் செல்கிறார். இதுதான் சிறந்த தலைவர் மற்றும் கேப்டனின் தேவையாக இருக்கிறது. இதை ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






