தென் ஆப்ரிக்காவில் தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கிய அறிமுக வீரர்
இந்தப் போட்டிக்கு டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு கம்ரன் குலாம் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் டேன் பேட்டர்சன் 5 மற்றும் அறிமுக வீரர் கார்பின் போஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 89 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வந்த அறிமுக வீரர் பந்துவீச்சில் கலக்கிய கார்பின் போஸ் அதிரடியாக 93 பந்தில் 81 ரன்கள் விளாசினார். இவரது அதிரடியால் தென் ஆப்பிரிக்கா 301 ரன்கள் குவித்து 90 ரன்கள் முன்னிலை பெற்றது. நசீம் ஷா மற்றும் குர்ரம் சேஷாத் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
திரில் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி
இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சவுத் சகில் 84, பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் மார்க்கோ யான்சன் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தச் சிறிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் செக் வைத்தார். அவர் அதிரடியாக ஆறு விக்கெட்டுகள் கைப்பற்ற, தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரோகித் சர்மா இப்படித்தான் நடந்துக்குவீங்களா?.. நேர்மையா இது எனக்கு பிடிக்கல – மைக் ஹஸி விமர்சனம்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ரபாடா சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் பரபரப்பான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. மேலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. அடுத்து இன்னொரு அணியாக தகுதி பெறுவது இந்தியாவா ஆஸ்திரேலியாவா? என்பது தான் போட்டியாக இருக்கிறது






