நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான வைபவ் சூரியவன்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கியதற்கான காரணங்கள் குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் உள்நாட்டு தொடரில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரராக வைபவ் சூரியவன்சி சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை தாங்கள் வாங்கியது ஏன் என சஞ்சு சாம்சன் காரணத்தை கூறியிருக்கிறார்.
60 -70 பந்துகளில் சதம்
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “அவரது சிறப்பம்சங்களை நான் பார்த்திருக்கிறேன். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியா அண்டர்19 அணிக்கு எதிராக சூரியவன்சி விளையாடியதை பார்த்தார்கள். அவர் 60 அல்லது 70 பந்துகளில் அந்த போட்டியில் மிக வேகமாக ஒரு சதத்தை அடித்திருந்தார்”
“அந்த போட்டியில் அவர் விளையாடிய ஷாட்கள் அவரிடம் ஏதோ விசேஷமாக இருப்பதை உணர்த்தியது. அப்படிப்பட்ட வீரர்களை நாங்கள் அருகில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் எங்கிருந்து எவ்வளவு பெரிய உயர் நிலைக்கு செல்கிறார்கள் என்பதையும் பார்க்க விரும்புகிறோம்”
ஏற்கனவே இதை செய்திருக்கிறோம்
“இதைப் போல எங்களுக்கு ஏற்கனவே செய்த வரலாறு உண்டு. இன்று இந்திய அணியில் ராக்ஸ்டார் ஆக இருக்கும் ஜெய்ஸ்வால் இளம் வயதில்தான் எங்கள் அணிக்குள் வந்தார். அடுத்து இதே போல ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உருவாக்கி இருக்கிறது”
இதையும் படிங்க : சச்சின் பாண்டிங்க்கு இருந்த அதே பிரச்சனை.. விராட் கோலிக்கும் இருக்கு.. தீர்வு இதுதான் – கிரேக் சேப்பல் பேட்டி
“இந்த வரிசையின் கீழ் சூரியவன்சியும் வருவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இப்படியான விஷயங்களை செய்ய விரும்புகிறது. நாங்கள் ஐபிஎல் தொடரை வெல்ல விரும்புகிறோம். அதே சமயத்தில் இப்படியான இளம் வீரர்களை நாங்கள் எந்த அளவுக்கு கொடுக்கிறோம் என்பதும் முக்கியம் என்று நினைக்கிறோம். அவர்களை இந்திய கிரிக்கெட்டில் சாம்பியன்களாக சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.






