இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் மூலமாகவும் இந்திய சர்வதேச அணிக்கு ஏராளமான திறமையான வீரர்கள் கிடைக்கின்றனர். இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலும் துலீப் ட்ராஃபியில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்.
இந்த சூழ்நிலையில் துலீப் ட்ராபியில் ஜெய்ஸ்வால் விளையாடிய அணியின் கேப்டன் ஆன ரகானே 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஒரு போட்டியில் ஏற்பட்ட சம்பவம் குறித்து சுவாரசியமாக நினைவு கூர்ந்து இருக்கிறார்.
எல்லை மீறிய ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் சூழ்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி இந்தியாவின் எதிர்கால நட்சத்திரமாக மாறி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற துலீப் ட்ராபி கிரிக்கெட் தொடரில் ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணி தெற்கு மண்டல அணியை எதிர்த்து விளையாடிய போது ரகானே தலைமையில் விளையாடிய ஜெய்ஸ்வால் எதிரணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ரவி தேஜாவிடம் தொடர்ந்து ஆடுகளத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதிகாரிகள் எச்சரித்தும் ஜெய்ஸ்வால் பின்வாங்க மறுத்ததால் அவரை உடனடியாக ரகானே ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றினார். இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு யூட்யூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகானே அந்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்து இருக்கிறார்.
கேப்டன் ரகானே எடுத்த முடிவு
இதுகுறித்து அவர் கூறும் போது “அந்த சம்பவத்திற்காக ஜெய்ஸ்வால் என் மீது வருத்தம் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஸ்லெட்ஜ் செய்யலாம், எதிர் அணியிடம் சில விஷயங்களை கூறலாம் ஆனால் எதிலும் எல்லை மீறக் கூடாது. அந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது தெரியாமல் எல்லையை கடந்து விட்டார் என்று எனக்கு தோன்றியது.
அந்த சமயத்தில் நான் அவரை மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பாவிட்டால் அவருக்கு அடுத்த நான்கு போட்டிகளில் விளையாட தடை ஏற்பட்டிருக்கலாம். எனவே எனது உள்ளுணர்வின்படி அந்த முடிவை மேற்கொண்டு அவரை வெளியே அனுப்பினேன். போட்டி நடுவர் அதற்குப் பிறகு என்னிடம் வந்து ஜெய்ஸ்வாலை தடை செய்ய இருப்பதாக கூறினார். ஆனால் நான் அவரை வெளியேற்றுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இறுதியில் அவளுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 முதல் 20% அபாரம் விதிக்கப்பட்டது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:பங்களாதேஷ் ODI.. ஆப்கான் அணி அறிவிப்பு.. லோக்கல் அதிரடி மன்னனுக்கு வாய்ப்பு.. இளம் ஸ்டாருக்கு அழைப்பு
அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 323 பந்துகளில் 275 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேற்கு மண்டல அணி தெற்கு மண்டல அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.






