நடப்பு டிஎன்பிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோவை அணி வீரர் சாய் சுதர்சனின் அபாரமான அதிரடி ஆட்டத்தால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்ததை அடுத்து இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களின் அபாரமான ஆட்டத்தால் திருப்பூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா 31 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 55 ரன்கள் குவித்தார்.
இதனால் திருப்பூர் தமிழன் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விக்னேஷ் முதல் பந்திலேயே வெளியேற, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சாய் சுதர்சன் மிக அபாரமாக விளையாடினார். 53 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் கூட்டணி திருப்பூர் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.
சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக விளையாடி 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 123 ரன்கள் குவித்தார். குறிப்பாக ஆட்டத்தின் 17 வது ஓவரை சாய் கிஷோர் வீச அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் தோல்வி பாதையில் பயணித்த கோவை அணி இவரது அதிரடி ஆட்டத்தால் சுலபமாக 18.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான வெற்றியை பெற்றது. மறுமுனையில் முகிலேஸ் 31 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:5 இன்னிங்ஸ் 3 டக்.. மோசமான சாதனையில் சஞ்சு சாம்சன்.. சரிந்த ஆவரேஜில் உச்சம் தொட்ட பரிதாபம்
இந்த இருவர் கூட்டணி ஜோடி சேர்ந்து 68 பந்துகளில்148 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்சன் அடித்த 123 ரன்களே தற்போது தனிநபர் அதிகபட்சமாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் முரளி விஜய் 2022ஆம் ஆண்டு 121 ரன்கள் குவித்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.






