இந்திய அணி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து இதுவரையில் மௌனமாக இருந்து வந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பேசியிருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானுக்கு 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு சென்றது. கடைசியாக பாகிஸ்தான் அணி இருநாட்டு தொடரில் விளையாடுவதற்கு 2013-ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளுக்கும் இடையே இருநாட்டுத் தொடர்கள் நடைபெறவில்லை.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி கடைசியாக இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட வந்தது. பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு எந்த விதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்தியாவில் பாகிஸ்தான் அணியின் பாதுகாப்புக்கு எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் வந்து விளையாடும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்தது. மேலும் அவர்கள் இதற்காக தனி பட்ஜெட் ஒதுக்கி பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பெரிய வருமானத்தை கொடுக்கும் இந்திய அணி தொடரில் பங்கேற்காவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய நஷ்டத்தை சந்திக்கும்.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் சோயப் மாலிக் கூறும்பொழுது “இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் என்பது தனியானவை. அதை என்ன முறைப்படி தீர்த்துக் கொள்ள வேண்டுமோ தனியாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் விளையாட்டுக்குள் அரசியல் வரக்கூடாது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்று உலகக் கோப்பை விளையாடியது. தற்போது பாகிஸ்தானுக்கு வருவதற்கு இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஜெய் ஷா வித்தியாசமா அந்த செக் வைக்கப் போறார்.. இந்த முறை பாகிஸ்தான் விடக்கூடாது – பஷித் அலி பேச்சு
தற்போது இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் பலர் பாகிஸ்தான் வந்து விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். எனவே இது அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். பாகிஸ்தானியர்களான நாங்கள் விருந்தோம்பல் கொண்டவர்கள். எனவே இந்திய அணி இங்கு வரவேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






