நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஏற்கனவே நான்கு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐந்தாவது கடைசி டி20 போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து மகளிர் அணியினர் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தனர். நான்கு ஓவர்களில் 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கேப்ஸி ஓரளவு நிதானமாக விளையாடி 27 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 25 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் க்நைட் 31 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 46 ரன்களை குவித்தார்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டீன் 19 பந்துகளில் 24 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு ஓரளவு சவாலான ரன்களை நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பிரான் ஜோனஸ் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து மகளிர் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பேட்ஸ் 16 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபிலிம்மர் 8 ரன்களில் லாரன் பெல்லின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அமிலியா கெர் 35 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 42 ரன்கள் குவிக்க, கேப்டன் டிவைன் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹல்லி டே 25 ரன்களில் லாரன் பெல் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, விக்கெட் கீப்பர் இசபெல்லா பேஸ் அவரது பந்து வீச்சிலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.
மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, நியூசிலாந்து அணி இறுதியாக 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று நான் நியூசிலாந்து மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இதையும் படிங்க:திறமை இருந்தும் பாண்டியாவுக்கு சிக்கல்.. ரோஹித் கம்பீர் விரும்பும் புதிய டி20 கேப்டன்.. திட்டம் சரி வருமா?
இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சாளர் லாரன் பெல் நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.






