இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதி கொண்ட போட்டியில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விதி தெரியாமல் அமெரிக்க அணி, வெல்வதற்கு அருகில் இருந்த ஒரு போட்டியை இழந்துவிட்டது. இந்திய அணி இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டி பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வழக்கம்போல் அமெரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வெகு சீக்கிரத்தில் இழந்துவிட்டது. இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் பொறுப்பாக விளையாடிய அணியை கரை சேர்த்தார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் அமெரிக்க அணி ஒரு தவறை செய்து ஐந்து ரன்களை இந்திய அணிக்கு இலவசமாக கொடுத்தது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவரில் முடிவிலிருந்து அடுத்த ஓவரை 60 வினாடிகளில் தொடங்கி விட வேண்டும் என்கின்ற புதிய விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த விதியை நீங்கள் ஒரு போட்டியில் மூன்று முறை மீறினால், உங்களுக்கு ஐந்து ரன்கள் பெனாலிட்டியாக கொடுக்கப்படும் என்று விதி கூறுகிறது.
இதையும் படிங்க : சூரியகுமார் ஷிவம் துபே பொறுப்பான ஆட்டம்.. அமெரிக்க அணியை வீழ்த்திய இந்தியா.. அடுத்த சுற்றுக்கு தகுதி
இந்த வகையில் இன்று அமெரிக்க அணி மூன்று முறை தாமதமாக ஓவர்களை தொடங்கியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் இலவசமாக கிடைத்தது. இதனால் இந்திய அணி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் போதும் என்கின்ற நிலை உருவானது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சூரியகுமார் யாதவ் அரை சதத்துடன் அமெரிக்க அணியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.






