தற்பொழுது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 88, ஆகா சல்மான் 53, இளம் வேகப்பந்துவீச்சாளர் அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க, 77.1 ஓவரில் பாகிஸ்தான் 313 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
நேற்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னர் 34 உஸ்மான் கவஜா 47 ரன்கள் என இருவரது விக்கெட்டை இழந்திருந்தது.
இதற்கடுத்து இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு லபுசேன் 60, ஸ்மித் 38, டிராவிஸ் ஹெட் 10 என்று வெளியேறினார்கள். இவர்களுக்கு பிறகு மிட்சல் மார்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து காப்பாற்ற போராடினார்கள்.
இந்த ஜோடியை ஆஸ்திரேலிய அணி 289 ரன்கள் எடுத்திருக்கும் பொழுது சஜித் கான் அலெக்ஸ் கேரியை 38 ரன்களில் வெளியேற்றினார். இந்த இடத்தில் இருந்து அடுத்த 10 ரன்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 299 ரன்களுக்கு ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. மிட்சல் மார்ஸ் 54 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணிக்கு இந்த சுற்றுப்பயணத்தில் அறிமுகமான இளம் வேகபந்துவீச்சாளர் அமீர் ஜமால் மிகச் சிறப்பாக பந்து வீசி 69 ரன்களுக்கு ஆறு விக்கெட் கைப்பற்றினார். தற்பொழுது 14 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸை விளையாட இருக்கிறது.
பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாமல் பாகிஸ்தான் தொடர்ந்து போராடி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்த போட்டியில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால், பாகிஸ்தான் சோகத்திற்கு முடிவு கட்டலாம்!






