நேற்று நியூசிலாந்து அணியை புனே மைதானத்தில் வைத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி பிரம்மாண்டமான முறையில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இந்தப் படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் ரன் ரேட் சரிந்து, அந்த அணி தற்பொழுது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து அணி ஏழு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை சந்திக்கிறது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளை தோற்று, பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளை வென்றால், பாகிஸ்தான் அணி நேராக அரை இறுதிக்கு வந்து விடும். அப்படி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் இந்திய அணியை எதிர்த்து கொல்கத்தா மைதானத்தில் விளையாட அதிக வாய்ப்புகள் உண்டு.
அதே சமயத்தில் நியூசிலாந்து அணி இலங்கை அணியை வென்று பாகிஸ்தான் அணியிடம் தோற்று, பாகிஸ்தான் அணி தனது கடைசி இரண்டு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தால், இரண்டு அணிகளும் 10 புள்ளிகளுடன் இருக்கும். இந்த இடத்தில் ரன் ரேட் யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் அரை இறுதிக்கு வருவார்கள்.
தற்பொழுது புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியால் நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்த இடத்தில் சுவாரசியமாக மாறி இருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் செய்யும் பொழுது ” இந்தியா பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரை இறுதியில் சந்தித்துக் கொண்டால்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய ட்வீட்டுக்கு மறு ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் ” கடந்த காலங்களில் இப்படியான விஷயங்கள் எங்களை நிறைய கெடுத்து இருக்கிறது!” என்று வேடிக்கையாக குறிப்பிட்டு இருக்கிறார்.
These things have spoilt us in the past also Vaughany 😂 https://t.co/ZFAxwPN0BL
— Shoaib Akhtar (@shoaib100mph) November 1, 2023
பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு 2019 ஆம் ஆண்டு இந்திய அணியை நம்பி இருந்தது. இந்திய அணி இங்கிலாந்தைவென்றால் பாகிஸ்தான் அணி அந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்று நிலை இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோற்ற காரணத்தினால், பாகிஸ்தான் அணி லீக் சுற்று உடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது!






