இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வென்று வரலாற்று வெற்றியைப் பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
முதலில் பேட்டிங் செய்து 284 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை 215 ரன்களுக்கு சுருட்டி, 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.
மேலும் ஆப்கானிஸ்தான அணி உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய அணியை வீழ்த்துவது இதுவே முதல் முறை. மேலும் அந்த நாட்டில் சமீபத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டது. உலகக் கோப்பை முழுதும் விளையாடும் படத்தை அந்த மக்களுக்கு தருவதாக ரசித் கான் கூறியிருந்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ரசித் கான் “தற்பொழுது கிரிக்கெட் என்பது மீண்டும் வீட்டிற்கு திரும்பிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவது மிகப்பெரிய ஒன்று.
சமீபத்தில் எங்கள் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3000திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.பலரும் வீடுகளை இழந்தார்கள். இந்த மிகப்பெரிய வெற்றி அவர்களது முகத்தில் கொஞ்சம் புன்னகையை கொண்டு வரும். கொஞ்சம் கொஞ்சமாக இதை அவர்கள் மறப்பார்கள்.
போட்டியில் என்ன நடந்தாலும் இறுதிவரை போராட வேண்டும் என்று ஓய்வு அறையில் நான் அனைவருக்கும் தெளிவு படுத்தினேன். நமக்கான சின்ன சின்ன இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு, ஹோட்டலுக்கு திரும்பி செல்லும் பொழுது, 100% கொடுத்து வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.
முஜிப் எங்களுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் வலைகளில் தொடர்ந்து ஒன்றாக பந்து வீசுவதோடு பேட்டிங்கும் செய்து வருகிறோம்.
ஒவ்வொரு விக்கெட்டிலும் வீசுவதற்கு எந்த பந்து சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் எங்களுக்குள் விவாதித்து தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்களிடம் அனுபவம் வாய்ந்த முகமது நபி இருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம்.
நபிக்கு இது 150வது போட்டி. அதேபோல் ரஹ்மத் ஷாவுக்கு இது 100வது போட்டி. வெற்றி பெற்ற பிறகு இதை கொண்டாடலாம் என்று கூறினோம். இது அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு வெற்றியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!






