நேற்றைக்கு முந்தைய நாள் ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது!
இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் வலுவாக நிற்க முடியும் என்கின்ற நெருக்கடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹென்றி கிளாசன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்தில் 14 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் 186 ரன்கள் சேர்த்தது.
இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் இருவரும் ஹைதராபாத் அணிக்கு பதிலடி தந்தார்கள்.
முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்த ஆட்டத்தில் 61 பந்தில் சதம் அடித்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாப் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக சேஸ் செய்த பொழுது சதம் அடித்த விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓட்டைக் கப்பலின் மாலுமியாக தனித்து போராடிக் கொண்டிருக்கும் ஹென்றி கிளாஸன் இந்த முறையும் ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங்கில கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ” பிரபலமற்ற ஒரு கருத்தைச் சொல்கிறேன். இரண்டு பேர் அடித்த சதத்தில் கிளாஸன் அடித்தது தான் சிறப்பானது.
ஏனென்றால் ஏற்கனவே வாய்ப்பு இழந்துவிட்ட ஒரு அணியில் அவர் ஒரு பகுதியாக இருந்து இதைச் செய்திருப்பதை கற்பனையாகப் பாருங்கள்
செயலிழந்த ஒரு அணிக்கு இப்படி சிறப்பாக செயல்படுவது கடினம். அன்று அவர் விளையாடிய விதம் மிக மிக சிறப்பானது!” என்று கெவின் பீட்டர்சன் பாராட்டி கூறியிருக்கிறார்!






