ஒரே இன்னிங்சில் கொல்கத்தா ஸ்பின்னர்கள் சேர்ந்து ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கின்றனர். 11 வருடங்களாக சிஎஸ்கே அணியிடமிருந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 204 ரன்கள் அடித்தது.
205 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் டூ ப்ளசிஸ் இருவரும் மிகச் சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்திருந்தது.
அப்போது சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக டூ ப்ளசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய மூவரின் விக்கெட்டை போல்ட் செய்து எடுத்தார் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி.
இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான லெக் ஸ்பின்னர் சுயாஸ் சர்மா இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதியில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆர்சிபி அணி. 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணிக்கு வருண் சக்கரவர்த்தி நான்கு விக்கெட்டுகள், சுயாஸ் சர்மா மூன்று விக்கெட்டுகள், சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் என ஸ்பின்னர்கள் சேர்ந்து இந்த இன்னிங்ஸில் 9 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்திருக்கின்றனர்.
இதற்கு முன்னர் ஒரு இன்னிங்சில் ஸ்பின்னர்கள் சேர்ந்து ஓது இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியது அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இன்றைய போட்டியில் புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்பின்னர்கள் சேர்ந்து ஒரு இன்னிங்சில் எடுத்த அதிக விக்கெட்டுகள் பட்டியல்:
- கொல்கத்தா – பெங்களூரு அணிக்கெதிராக – 9 விக்கெட்டுகள் – இன்று
- சென்னை – டெல்லி அணிக்கெதிராக – 8 விக்கெட்டுகள் – 2012
- சென்னை – பெங்களூரு அணிக்கெதிராக – 8 விக்கெட்டுகள் – 2019
- சென்னை – டெல்லி அணிக்கெதிராக – 8 விக்கெட்டுகள் – 2019






