இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பந்துவீச்சாளர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைத் தக்கவைக்க ஓவர்-ரேட்டை சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் இந்த டெஸ்ட் தொடரில் மிக முக்கியப் பங்காற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மைதானத்தின் தன்மையைப் பொறுத்து சிறந்த பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் என்றும், பந்துவீச்சாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும்போது “நாங்கள் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை முறையாகப் பார்த்துவிட்டு அதற்கேற்ப காம்பினேஷனைத் தேர்ந்தெடுப்போம். ஓவர்-ரேட் விஷயத்தில் பவுலர்கள் தங்களது பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும். ஸ்லோ ஓவர்-ரேட் காரணமாக எந்தவொரு டபிள்யூடிசி புள்ளிகளையும் நம்மால் இழக்க முடியாது. காற்று வீசும் சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகிவிட்டோம். இது முழுக்க முழுக்க மைண்ட் செட் சம்பந்தப்பட்ட விஷயம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய மோர்னே மோர்கல் “வெளியில் நடக்கும் சத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு, பந்தை சரியான ஏரியாக்களில் பிட்ச் செய்ய வேண்டும். நாம் புள்ளிகளை இழக்கக் கூடாது. அணி முழு உரிமையையும் எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்க வேண்டும். அந்தப் பொறுப்பு பவுலர்கள் மற்றும் கேப்டன் மீதும் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில் “மொகமது சிராஜ் அணியின் பிளானில் இருந்து வெளியேறிவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். அவர் ஒரு உலகத் தரமான பவுலர் நாம் எந்த பவுலிங் காம்பினேஷனைத் தேர்ந்தெடுத்தாலும், இந்த வீரர்களுக்கு 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.






