சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் தலைமைப் பண்பு மற்றும் அவர் இல்லாத குறையை அணி எப்படி உணரும் என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் விரிவாகப் பேசியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் அசைக்க முடியாத வெற்றிக்கும், களத்தில் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளுக்கும் பின்னால் இருந்த ரகசியங்களை முகமது கைப் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இனி வரும் காலங்களில் அணியை வெளியில் இருந்து வழிநடத்துவதற்கும், களத்தில் நின்று செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து முகமது கைப் பேசும்போது “முன்னணியில் இருந்து முடிவுகளை எடுக்கும் குணம் அவரிடம் இருந்தது. சிஎஸ்கே தோற்றால் மக்கள் எப்போதும் பிளெமிங்கை குறை சொன்னதில்லை, மாறாக தோனி தவறு செய்துவிட்டார் என்றுதான் கூறுவார்கள். தோனியின் அணி தோற்றுவிட்டது என்று சொல்வார்கள். பாராட்டு கிடைத்தால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். பொதுவாக மற்ற ப்ளேயர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளவும், அதை ஏற்றுக்கொள்ளவும் பயப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய முகமது கைப் “தோனி எப்படி ஸ்ட்ரேட்டஜிஸ் மற்றும் பிளான்ஸ் வகுத்தார், எப்படி டீமை கட்டமைத்தார், அணியைப் புதிய உயரத்திற்கு கொண்டு சென்று எப்படி ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார், சீனியர்களை அணியில் தக்கவைத்துக்கொண்டே ஜூனியர்களை எப்படி வளர்த்தெடுத்தார் மற்றும் ப்ளேயர்களுக்கு எப்படி ஆதரவு அளித்தார் என்பதை சிஎஸ்கே தவறவிடும். இந்த விஷயங்களை நிறைய பேரால் செய்ய முடியாது. இதுதான் அவரது வெற்றியின் ரகசியம். ஒரு தலைவராக அவர் செய்த பணி இது. அவரைப் போன்ற ஒரு வெற்றிகரமான கேப்டனை எங்குமே பார்க்க முடியாது. அந்தப் பாரம்பரியத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில் “20 ஓவர்களும் கிரவுண்டில் இருப்பதற்கும், வெளியில் இருந்து வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு மென்டராக இருப்பதற்கும், கேப்டனாக இருப்பதற்கும் அல்லது ஃபீல்டில் இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் ஃபீல்டில் இருந்தால் கேமை அதிகமாகக் கண்ட்ரோல் செய்ய முடியும். அதை தோனி கேப்டனாக இல்லாதபோது கூட செய்தார்” என்று கூறி இருக்கிறார்.






