இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பிளேயிங் லெவன் இடம் குறித்தும், அணியின் காம்பினேஷன் குறித்த விவாதங்கள் குறித்தும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஆர். அஸ்வின் தெளிவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான போட்டிகளில் இளம் வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், காயத்தால் வெளியேறி இருக்கும் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பும்போது பிளேயிங் லெவனில் யார் இடம்பிடிப்பார்கள் என்ற தேவையற்ற குழப்பங்கள் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆர். அஸ்வின் பேசும்போது “நாம் எதற்காகவும் இல்லாமல் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், இதில் நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் முதல் சாய்ஸ் வீரர் கிடையாது, சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் தான் டாப் ஆர்டரில் விளையாடுவார்கள். ஆனால் இந்த ஒரு குறிப்பிட்ட போட்டியில் அணியில் உள்ள வீரர்களை வைத்து சரியான ஆர்டரை மேலாண்மை செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “இஷான் கிஷன் இல்லாத வரை சஞ்சு சாம்சனை நம்பர் த்ரீ ரோலில் களமிறக்குவது தான் உங்களின் பெஸ்ட் ஆப்ஷனாகும், ஏனெனில் அவரிடம் அதற்கான அனுபவம் உள்ளது. இஷான் மீண்டும் அணிக்குத் திரும்பும் வரை இந்த பிளேயிங் லெவன் சரியான தேர்வாக இருக்கும்” என்றும் கூறி இருக்கிறார்.






