இந்திய அணியில் அமித் மிஸ்ரா விளையாடிய காலத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் மற்றும் அதன் பிறகு நடந்த எதிர்பாராத திருப்பங்கள் குறித்து மூத்த ஸ்பின்னர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
பெங்களூரில் நடந்த போட்டியில் விளையாடியபோது அமித் மிஸ்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டு அணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது அனில் கும்ப்ளே இந்திய அணியின் கோச்சாக செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் அணிக்குள் திரும்ப முயற்சி செய்த அமித் மிஸ்ராவுக்கு விராட் கோலியிடம் இருந்து முறையான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அமித் மிஸ்ரா பேசும்போது “பெங்களூரில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்து நான் வெளியேறியபோது அனில் கும்ப்ளே கோச்சாக இருந்தார். நான் அனில் பாயிடம் பேசும்போது ‘கவலைப்பட வேண்டாம், நீ ஃபிட் ஆனதும் ஆட்டோமேட்டிக்காக அணிக்குள் வந்துவிடுவாய்’ என்றார். அதன் பிறகு விராட் கோலி கேப்டன் ஆனார். அவரிடம் சென்று ‘சகோதரா, அடுத்து என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நீ கவலைப்பட வேண்டாம், முழுமையாக ஃபிட் ஆகி கம்ஃபர்ட்டாக இரு, நீ அணியில்தான் இருக்கிறாய்’ என்றார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து அமித் மிஸ்ரா பேசும்போது “அதன் பிறகு நான் அவரிடம் சென்று நிலைமை என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களுக்குள் உனக்குத் தெரிவிக்கிறேன்’ என்றார். ஆனால் ஒரு வாரம் கடந்தது, இரண்டு வாரங்கள் கடந்தன, மூன்று வாரங்கள் கடந்தும் அவரிடமிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை. நான் அவருக்கு கால் செய்தேன், ஆனால் அவர் காலை எடுக்கவில்லை. மெசேஜ் செய்தேன், ரிப்ளை வரவில்லை. மீண்டும் கால் செய்தேன், பதில் இல்லை. இன்னும் இரண்டு முறை கால் செய்தும் எதுவும் வரவில்லை. அதனால் நானும் அதை விட்டுவிட்டேன். நம்மை ஒருவர் விரும்பாதபோது நாம் என்ன செய்ய முடியும்? என்னை விட மோசமாகக் காயம் அடைந்து, நீண்ட காலம் காயத்தில் இருந்த வீரர்கள் எல்லாம் கம்பேக் கொடுத்தபோது, எனக்கு மட்டும் இன்று வரை இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்”.






