இந்திய தொடரால் பெரிய பணம் குவியுது.. ஆனால் அதனால் எங்களுக்கு பெரிய லாபம் இல்லை – வெஸ்ட் இண்டீஸ் சிஇஓ பேச்சு

0
0

​சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தற்போதைய நிதிப் பங்கீட்டு முறையானது பெரிய நாடுகளுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகவும், இதனால் மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய கிரிக்கெட் வாரியங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச தொடர்கள் மூலம் பிசிசிஐ மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டினாலும், எதிரணியாகச் சென்று விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் எந்தப் பங்கும் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

​கடந்த காலங்களில் அணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் போது தொடக்கக் காலத்தில் பெரிய அளவில் உத்தரவாதத் தொகையான டூரிங் ஃபீ வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1997 ஆம் ஆண்டு ஐசிசி உறுப்பினர்கள் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் இந்த நிதி மாதிரி முற்றிலும் மாற்றப்பட்டது. புதிய விதிகளின்படி போட்டியை நடத்தும் நாடு மட்டுமே ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் முழு லாபத்தையும் வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றது, இதனால் இரு வாரியங்களுக்கு இடையேயான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்டது.

- Advertisement -

​இதுகுறித்து கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் சிஇஓ கிறிஸ் டெஹ்ரிங் பேசும்போது, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தத் தொடரின் மூலம் எந்த வருமானமும் கிடைக்காது, ஏனெனில் இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தொடர் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

​அவர் மேலும் கூறும்போது, “இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நீங்கள் 1997 ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும். அப்போது சர்வதேச கிரிக்கெட்டின் நிதி மாதிரியை மாற்ற ஐசிசி உறுப்பினர்கள் வாக்களித்தபோது நான் அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அங்கு இருந்தேன். அதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஒரு விருப்பமான அணியாக இருந்தது, அனைவரும் எங்களை அழைத்துப் போட்டிகளை நடத்த விரும்பினர். அப்போது எங்களுக்குக் கிடைத்த டூரிங் ஃபீ, நாங்கள் கரீபியனில் போட்டிகளை நடத்திப் பெறும் வருவாயை விட அதிகமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் புதிய முறையால் அது முற்றிலும் மாறியது. இது மிகவும் நியாயமற்ற முடிவு. ஐசிசி உறுப்பு நாடுகளால் நாங்கள் ஒன்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டோம். அந்த நேரத்திலேயே நான் எச்சரித்தேன், இந்த முடிவு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வழியமைத்துவிட்டது, ஏனெனில் இது எங்கள் முக்கியமான வருமான ஆதாரத்தைப் பறித்துவிட்டது” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -