வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பேட்டர் திலக் வர்மா விசித்திரமான முறையில் ரன் அவுட் ஆனார். இது குறித்து முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், ஆட்டத்தின் 17வது ஓவரில் அக்சர் பட்டேல் அடித்த பந்து பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அருகே தடுக்கப்பட்டபோது திலக் வர்மா கவனம் இல்லாமல் விக்கெட்டை இழந்தார்.
இது குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது “நடுவர்களே பவுண்டரி எல்லைக்கும் தங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகம் என்பதால் அதை மேல்முறையீடு செய்யும்போது, அதே தொலைவில் இருந்த திலக் வர்மாவும் அக்சர் பட்டேலும் அது பவுண்டரி என்று எப்படி முடிவு செய்தார்கள்? அக்சர் பட்டேலாவது இறுதியில் விழிப்புணர்வுடன் இருந்தார். ஆனால் திலக் வர்மா ஏதோ பீச்சில் வாக்கிங் போவது போல நடந்து சென்றார்; அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை.”
”பொதுவாக எந்தவொரு பவுண்டரி சேவ் நிகழ்வுக்கும் அம்பயர்கள் உடனடியாக தேர்ட் அம்பயரை அணுகுவார்கள். விக்கெட் இருக்கும் இடத்திற்கும் பவுண்டரிக்கும் இடையே இருக்கும் அதிக தொலைவு தான் அதற்கு முக்கிய காரணம். ஃபீல்டர் பந்தை தொட்டாரா என்பதில் சந்தேகம் இருப்பதால் அவர்கள் காத்திருக்கிறார்கள், இதன் பொருள் பந்து இன்னும் லைவ்-ல் தான் இருக்கிறது என்று அர்த்தம்.”
”இந்த போட்டியில் பல சிறப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், திலக் வர்மாவின் ரன் அவுட் தான் இதன் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்தியா போட்டியில் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றிருந்தாலும், இது மட்டுமே நம் மனதில் நிற்கிறது; கிரிக்கெட்டில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடக்கும்” என்று கூறி இருக்கிறார்.






