தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் மற்றும் ஃபார்ம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி போன்ற திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ந்து அதே ஃபார்மை தக்கவைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். சர்வதேச போட்டிகளில் நிலைத்து நிற்பதற்கு வெறும் திறமை மட்டுமே போதாது, தொடர்ச்சியான உழைப்பும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையும் மிக முக்கியம்.
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த சூழலில், இளம் வீரர்களுக்கு முறையான வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்டர்களின் இடத்தை நிரப்பும் திறமை கொண்ட இளம் வீரர்களை கண்டறிவது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி பற்றி கபில் தேவ் பேசும்போது “இது மிக விரைவான கணிப்பு. அவரிடம் திறமை இருக்கிறதா என்றால், நிச்சயம் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் மிகுந்த திறமையுடன் வந்து, பின்னர் காணாமல் போனவர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். வினோத் காம்ப்ளியைப் பாருங்கள், அதைப் பற்றி நாம் என்ன சொல்வது? வைபவுக்கு இப்போது 16 வயதுதான் ஆகிறது. அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள், பிறகு பேசுவோம். அவருடைய வாழ்க்கை முறையும் சிந்தனையும் மாறும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் எவ்வாறு உருவாகிறார் என்பது நமக்குத் தெரியும். அவரது தற்போதைய பெர்ஃபார்மன்ஸை விட அதுவே மிக முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அடுத்த தலைமுறை வீரர்கள் பற்றி பேசிய கபில் தேவ் “நாம் ரோஹித், விராட்டைப் பார்த்திருக்கிறோம். அதற்கு முன்பே சச்சினைப் பார்த்துவிட்டோம். அவர்கள் நம்மைப் பெருமையடையச் செய்தார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் அடுத்த ஹீரோவைத் தேடுகிறீர்கள். ‘அடுத்த ஹீரோ யார்?’ என்று நீங்கள் எப்போதும் கேட்கிறீர்கள். ஒரு கிரிக்கெட்டராக, விராட் கோலிக்கு மாற்றாக வந்து 15 ஆண்டுகள் விளையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்ற அந்த இளம் பையன் யார் என்று பார்க்கவே என் மனம் விரும்புகிறது” என்று கூறி இருக்கிறார்.






