இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் சடகோபன் ரமேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாகப் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வரும் சூழலில், கேப்டனாக அவருடைய முடிவுகள் அணிக்குச் சாதகமாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு ஓப்பனராகப் பிரகாசித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தனது பேட்டிங் பொசிஷனை மாற்றிக் கொண்டது சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. சொந்த சுயநலத்தை விட அணியின் வெற்றியே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது “என்னை மிகவும் ஏமாற்றியது 2025 ஐபிஎல் சீசன் தான். அந்த சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் விளையாடினார், ஆனால் ஓப்பனிங் இறங்கவே இல்லை. கான்வே கெய்க்வாட் ஓப்பனிங் காம்பினேஷனை நாம் பார்க்கவே முடியாமல் போனது. ஐபிஎல் போட்டிகளில் ஓப்பனராக மிளிர்ந்த போதிலும், ருதுராஜ் மூணாவது பொசிஷனில் பேட்டிங் செய்யவே பிடிவாதமாக இருந்தார். சுப்மன் கில் இந்திய அணிக்குத் திரும்பியதால் தனது வழி அடைக்கப்பட்டு விட்டதாகக் கருதி, மூணாவது பொசிஷன் மூலமாக இந்திய அணிக்குள் நுழைய அவர் விரும்பினார். இது சிஎஸ்கே அணியைக் கடுமையாகப் பாதித்தது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசும்போது “உங்களுக்கு 18 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்த ஃபிரான்சைஸ் பற்றித் தான் கேப்டனாக நீங்கள் முதலில் யோசிக்க வேண்டும். கேப்டனாக உங்களின் முதல் முன்னுரிமை சிஎஸ்கே அணிக்கு எது நன்மையோ அந்த பொசிஷனில் பேட்டிங் செய்வது தான். ஃபிரான்சைஸ் உங்களை நம்பி கேப்டன்ஷிப் தரும்போது, இங்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் உங்கள் மைண்ட் இயங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “அணியின் தலைமை கோச் மாற்றப்பட்ட பிறகு, அடுத்த கேள்வி ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவாரா என்பது தான். புள்ளிவிவரங்களை மறந்துவிட்டுப் பார்த்தால் கூட, கேப்டனாக அவர் பிரகாசித்த தருணங்கள் என்று எதுவுமே என் கண்ணுக்குத் தெரியவில்லை. இரண்டு சீசன்களுக்கு மேல் அவர் அணியை லீட் செய்துள்ளார், அதாவது கேப்டனாக நிரூபிக்க அவருக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் அவர் கேப்டனாக அரிதாகவே ஜொலித்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.






