அகர்கர் அத்தியாயம் முடிவுக்கு வருகிறதா?. இந்திய அணியில் வரப்போகும் முக்கிய மாற்றம்.. முழு விபரம் இதோ

0
2

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் தொடர்பாக தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஜூலை மாதம் தேர்வுக்குழுத் தலைவராக பொறுப்பேற்ற அகர்கர், இந்திய அணியின் பல முக்கியமான தேர்வு முடிவுகளில் பங்காற்றியுள்ளார். அவரது காலகட்டத்தில் இந்திய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை பட்டத்தையும் தக்கவைத்தது.

அகர்கரின் தற்போதைய பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதற்கிடையில், அகர்கர் தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய தலைமைத் தேர்வாளரை தேடும் பணியை பிசிசிஐ தொடங்கியுள்ளது. குறிப்பாக 2027 ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நேரத்தில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், அகர்கரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவிடம் கேட்கப்பட்டபோது, “இன்று எந்தவொரு தனிநபர் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. எங்களிடம் இன்னும் 15 நாட்கள் அவகாசம் உள்ளது. தகுந்த நேரத்தில் இது குறித்து முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார். அதனால் அகர்கர் பதவியில் தொடரமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தாலும், புதிய தலைமைத் தேர்வாளர் குறித்த இறுதி முடிவை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

- Advertisement -
- Advertisement -