ரோஹித் சர்மா ஆரம்ப காலத்தில் தனது இயல்பான திறமையை மட்டுமே அதிகமாக நம்பியதாக முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். தான் கடுமையாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், ரோஹித்திடம் ஜிம்முக்கு வருமாறு அடிக்கடி கூறுவேன் என்றும், அதற்கு ரோஹித் “விட்டுடு, நான் ரன்கள் அடிப்பேன்” என்று பதிலளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட்டில் உடற்தகுதிக்கு இப்போது இருப்பது போன்ற முக்கியத்துவம் இல்லை என்றும் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு செய்தி தொலைக்காட்சி ரோஹித் சர்மாவின் வயிற்றுப் பகுதியை வட்டமிட்டு அவரது புகைப்படத்தை வெளியிட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்ததாக நாயர் கூறியுள்ளார். அந்த புகைப்படம் ரோஹித்தின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும் போது “அந்த புகைப்படம் அவரது மனதில் பதிந்துவிட்டது. அதன்பிறகு விஷயங்கள் மாறத் தொடங்கின” என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார். பின்னர் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்த உடற்தகுதி கலாச்சாரமும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






