கொழும்புவில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீரர்களிடையே நிலவி வரும் ஸ்லெட்ஜிங் மற்றும் மோதல் சம்பவங்கள் குறித்து இந்திய பவுலிங் கோச் மோர்னே மோர்கல் பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களத்தில் வீரர்களுக்கு இடையே அக்ரசிவ் சலசலப்புகளும் மோதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை ஃபபாஸ்ட் பவுலர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருவருக்கும் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு டிமெரிட் பாயிண்ட் விதித்தது.
இரண்டாவது நாளில் இலங்கையின் பிரபாத் ஜெயசூரியா ஆட்டமிழந்த கோபத்தில் கிரவுண்ட் எக்யூப்மென்ட்டை தாக்கியதற்காக ஐசிசி-யால் கண்டிக்கப்பட்டு ஒரு டிமெரிட் பாயிண்ட் பெற்றார். அதேபோல மூன்றாவது நாளில் ரிஷப் பண்டிற்கு பதிலாக சப்ஸ்டிடியூட் ஃபீல்டராக களம் புகுந்த சர்ஃபராஸ் கான், இலங்கை கேப்டன் தனஞ்சயா டி சில்வாவை தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை ஈர்த்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் கோச் மோர்னே மோர்கல் இதுகுறித்து பேசும்போது “நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளில் போட்டித்தன்மை மிக அதிகமாக இருக்கும் போது களத்தில் இதுபோன்று சலசலப்புகள் மற்றும் பேச்சுகள் எழுவது மிகவும் இயல்பான ஒன்றுதான். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்த சலசலப்புகள் குறித்து அவர் தொடர்ந்து பேசும்போது “நாங்கள் எந்த சூழ்நிலையிலும் எங்கள் கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். களத்தில் இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள் நடக்கும் போது வீரர்கள் எல்லை மீறாமல் கட்டுப்பாட்டுடன் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






