இந்திய கிரிக்கெட் வீரர்கள் டி20 உலக கோப்பையில் விளையாடி முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜீதேஷ் சர்மா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கு முன்பாக தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் பார்மின்றி தவித்த நிலையில் அதற்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜித்தேஷ் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்து கொண்டிருந்தார். இதனால் டி20 உலக கோப்பை தொடரில் அவரது பெயர் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது பெயர் நீக்கப்பட்டு மீண்டும் சாம்சனின் பெயர் உறுதியானது.
அதாவது டாப் ஆர்டர் வரிசையில் துவக்க வீரர் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் சாம்சன் பெயர் இடம் பெற்றது எனவும் மிடில் வரிசையில் இடது கை வீரர் வேண்டும் என்பதால் இவரது பெயர் விலக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஜித்தேஷ் சர்மா தான் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது முதன்முதலாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் ஹர்திக் பாண்டியா தான் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஹர்திக் பாண்டியா மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். நான் அவரிடம் பலமுறை உரையாடி இருக்கிறேன். நானும் அவரும் பரோடா அணிக்காக விளையாடி இருக்கிறோம். எனவே தான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். அவரைப் போல கடின உழைப்பாளர் கிடையாது. நீச்சல், யோகா என அனைத்தும் செய்து தன்னை திறமையாகவும் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்வார்.
மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் எனது பெயர் இல்லாத போது முதன்முதலாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் ஹர்திக் பாய் தான். இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து ஒரு மனிதனாகவும் கிரிக்கெட் வீரனாகவும், நீ வளர வேண்டும் என்று என்னிடம் கூறினார் அவ்வளவுதான். மேலும் வேறு சில கிரிக்கெட் வீரர்களும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்கள் ஆனால் முதன் முதலில் வந்தது ஹர்திக் பாண்டியாவிடமிருந்து தான்” என்று பேசி இருக்கிறார்.






