இன்று டி20 உலக கோப்பையின் தொடக்கப் போட்டியில் இலங்கை கொழும்புவில் பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்திருப்பதால் இந்த போட்டியில் தோற்றால் உலக கோப்பையை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போராடிய நெதர்லாந்து
முதலில் பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் லிவிட் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆரம்பித்தார். அடுத்து நட்சத்திர ஆட்டக்காரர் பாஸ் டி லீட் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் கேப்டன் எட்வர்ட்ஸ் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சல்மான் மிர்சா மூன்று விக்கெட்டுகள், அப்ரார் அகமது இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
போராடி வென்ற பாகிஸ்தான்
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபர்கான் 31 பந்துகளில் 47 ரன்கள், சையும் அயூப் 13 பந்தில் 24 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள். அதற்கு அடுத்து வந்த கேப்டன் சல்மான் அலி ஆகா 8 பந்தில் 12 ரன், பாபர் அசாம் 18 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதையும் படிங்க : பிசிசிஐ பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் ஆடுகளத்தில் சதி செய்யும்.. இதுக்கு இந்த போட்டியே சாட்சி – சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டு
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி வேகமாக ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 19ஆவது ஓவரில் பஹீம் அஷ்ரப் அபாரமாக விளையாடி மூன்று சிக்ஸர் உடன் 24 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






