இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற இந்திய அணியும் முதல் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடும்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் வாஷிங்டன் சுந்தருக்கு சரியான மாற்றுவீரர் இவர்தான் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஐந்து ஓவர்களுக்கு மேல் பீல்டிங் செய்யவில்லை. ஆனால் பேட்டிங்கில் இந்திய அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என்று சந்தேகம் உள்ளது.
இதனால் அவருக்கு பேக்கப் வீரராக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டும் விளையாடிய ஆயுஷ் பதோனியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரரான இர்ஃபான் பதான் வாஷிங்டன் சுந்தருக்கு சரியான மாற்றுவீரர் ரியான் பராக் தான் என்று அதற்கான காரணத்தை தெளிவுடன் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆயுஷ் பதொனிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். அவர் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் தற்போதைய சமயத்தில் சர்வதேச அணிக்கு சரியான மாற்றுவீரர் என்றால் அது ரியான் பராக் தான். அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் மேலும் இரண்டாம் கட்ட பந்துவீச்சாளர். பராக் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர், ஆனால் அவரது தோள்பட்டை காயம் காரணமாக அவரால் தற்போது விளையாட முடியவில்லை.
இந்த காயம் காரணமான பிரச்சனைகளை இந்திய அணி எப்படி கையாள்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். நியூசிலாந்து அணி வலுவாக இல்லை என்றாலும் அவர்கள் நிச்சயம் சவால் அளிக்கக் கூடிய வகையில் எப்போதும் செயல்படுவார்கள். அவர்கள் முன்வைக்கும் சவால்களோடு இந்திய அணி எப்படி அந்த சவால்களை எதிர்கொள்ளும் என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார்.






