தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஆடிய அபார ஆட்டத்தை முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ்,பாராட்டியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கு கோலி,ரோஹித் இணை 136 ரன்கள் சேர்த்து இந்தியாவை 50 ஓவர்களில் 349 என்ற இலக்கை எட்ட வைத்தது.
கோலி 120 பந்துகளில் 135 ரன்களுடன் தனது 52-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். ரோஹித் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ரமேஷ்,“விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் விதம் ‘இனி பேச்சு கிடையாது,வீச்சு தான் என்பது போல் மாறிவிட்டது.
இவர்கள் இருவரும் வார்த்தைகளால் அல்ல, பேட்டால் பதில் சொல்கிறார்கள்.”
சாதனை ஆட்டம்:
” ஆஸ்திரேலியாவில் கடைசி ஒருநாளில் ரோஹித் சதம் அடித்ததும், அடுத்த தொடரில் விராட் கோலி சதம் அடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் வந்த இரண்டு சதங்களும் நமது இரண்டு சிறந்த திறமைசாலிகளான ரோஹித் ,விராட்டிடமிருந்து தான் வந்திருக்கின்றன.ரோஹித், விராட் இனி தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் மீதித் தருணங்களையும் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்பது மிக முக்கியம்.”
“கோலிக்கோ ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்ததும் இன்று ஏதாவது சாதனை உள்ளதா? என்று கேட்பது போல ஆகிவிட்டது. இப்போது ஒரே ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் அதேபோல் ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற அப்ரிடி சாதனையை முறியடித்துள்ளார்.”
ஒரே அளவுகோல் தான்:
“2027 உலகக்கோப்பை ஆடுவார்களா என்று ரோஹித், விராட்டைப் பற்றி சந்தேகம் எழுப்புபவர்கள். அப்போது ரோஹித் 40 வயதாகிவிடுவார்.விராட் 39 ஆகிவிடுவார். அதனால் பெர்ஃபார்மன்ஸ் மட்டுமே தீர்மானிக்கும்’ என்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இவ்வளவு வருடங்களாக எத்தனையோ பெர்ஃபார்மன்ஸ்களை தந்திருக்கிறார்களே.”
இதையும் படிங்க: 61 பந்து.. 14 வயது சூரியவன்சியின் வேற முகம்.. பதிலடியாய் 30 பந்தில் உடைத்து விட்ட பிரித்வி ஷா – SMAT 2025
“பெர்ஃபார்மன்ஸை அளவுகோலாக வைப்பது சரிதான். ஆனால் அதே சமநிலையில் ஒரு இளம் வீரரைப் பற்றி கேள்வி எழுப்பினால் அவன் இளம் வீரன், கண்டிப்பாக ஆடுவான், கேப்டனும் ஆவான்’ என்று சொல்கிறார்கள். அதாவது சிலருக்கு வயது அளவுகோல், ரோஹித்-விராட் போன்ற ஜாம்பவான்களுக்கு பெர்ஃபார்மன்ஸ் அளவுகோல். இது முற்றிலும் அநியாயம். அனைவருக்கும் ஒரே அளவுகோல் தான். பெர்ஃபார்மன்ஸ் என்றால் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் எப்போதும் முதலிடத்தில் தான் இருப்பார்கள்” என்று ரமேஷ் தெரிவித்தார்.






