டி20 போட்டிகளில் சதம் அடித்துவிட்டதால், தற்போது அபிமன்யு ஈஸ்வரனை டெஸ்ட் அணியில் இடமளிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தேர்வுக்குழுவினரை கிண்டல் செய்துள்ளார். பெங்கால் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன், 2025-26 சையது முஷ்தாக் அலி டிராபி போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் குவித்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடர்களுக்கான அணியில் இடம்பெறாத அபிமன்யு ஈஸ்வரன், 2025-26 ரஞ்சி டிராபி சீசனில் நல்ல தொடக்கத்தைப் பெற்றார். அதை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்தார்.
அபிஷேக் ஷர்மாவின் வரலாற்று சாதனைக்குப் பிறகு 311 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போட்டியில், ஈஸ்வரன் தனியொரு ஆளாக போராடி அணியின் மொத்த ரன்களில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்தார். இது குறித்து பேசிய, அஸ்வின், “அபிமன்யு ஈஸ்வரன் இப்போது டி20யில் சதம் அடித்துவிட்டார். இனி நிச்சயமாக டெஸ்டிலும் அவரை பார்க்கலாம்.”
அஸ்வின் கிண்டல்
” டி20-ல ரன்கள் அடித்த்தால் இனி டெஸ்ட் டீம்ல நிச்சயமாக இடம் கிடைக்கும்” என்றார். தற்போதைய தேர்வுக்குழு, ஐபிஎல் மற்றும் வெள்ளைப் பந்து திறமையை வைத்து டெஸ்ட் அணியைத் தேர்வு செய்கிறது என்றும், சிவப்புப் பந்து உள்ளூர் கிரிக்கெட்டை முறையாக பரிசீலிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை தான் அஸ்வின் கேலி செய்துள்ளார்.
ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணி பெரும் மாற்றத்தை சந்தித்த போதும், பெஞ்சிலோ இந்திய ‘A’ அணியிலோதான் ஈஸ்வரனுக்கு இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களின் போது காலியிடங்கள் இருந்தும் அவருக்கு அணியில் இடமில்லை.
ஈஸ்வரன் கவலை:
100-க்கும் மேற்பட்ட முதல் தர போட்டிகளில் 47.85 சராசரியுடன் 27 சதங்கள் குவித்தும் ஈஸ்வரன் இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இது குறித்து கவலை தெரிவித்த அவர்,“ஆமாம், சில சமயம் வலிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு உழைப்பு, பயிற்சி எல்லாம் போட்டு, மைதானத்தில் நின்று விளையாடி அணிக்கு பங்களிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது.”
இதையும் படிங்க:
“ஆனால் எனக்கு குடும்பம், நண்பர்கள், பயிற்சியாளர் என வலுவான ஆதரவு அமைப்பு இருக்கிறது. அவர்கள் என்னை தரையில் நிற்க வைக்கிறார்கள், உற்சாகமூட்டுகிறார்கள். இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன். ரஞ்சி சீசனை எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்றார். அபிமன்யு கேப்டன்ஷியில் பெங்கால் அணி 2025-26 சையது முஷ்தாக் அலி டிராபியின் சி பிரிவில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல தொடக்கம் கண்டது. பஞ்சாப் போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்தது.






