தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சு குறித்து இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா பேசியிருக்கிறார்.
இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பவர் பிளேவில் மூன்று விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் இருந்தார். மேலும் அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தொடரை விட்டு கிளம்பும் ஜோஷ் ஹேசில்வுட்
இந்த நிலையில் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராக ஜோஷ் ஹேசில்வுட் நடப்பு டி20 தொடரை விட்டு வெளியேறுகிறார். மீதம் இருக்கும் மூன்று டி20 போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.
நடைபெற இருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராக உள்நாட்டு டெஸ்ட் தொடரில் பயிற்சி பெறும் விதமாக விளையாட செல்கிறார். அவரது பந்துவீச்சு சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக உச்ச நிலையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிட்டது.
எனக்கு அது தெரியாது
அபிஷேக் ஷர்மா ஜோஷ் ஹேசில்வுட் குறித்து பேசும்பொழுது “ஒரு பேட்ஸ்மேனாக நான் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது இருந்தே அவரது பந்துவீச்சை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் எங்களுக்கு எப்படியான சிரமத்தை தருவார் என்று எங்களுக்கு தெரியும். வெளிப்படையாக இன்று அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியப்படும் அளவில் இருந்தது. டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை. நான் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன். மறுமுனையில் இப்படி ஒருவர் பந்து வீசிக்கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது அவரிடம் திட்டம் இருப்பதாக எனக்கு தோன்றியது”
இதையும் படிங்க : டி20 WCக்கு இன்னும் நான்கே மாதம்.. இன்றும் கம்பீர் செய்த 5 தவறுகள்.. ரோகித் தந்தது வீண் செய்யப்படுதா?
“ஹேசில்வுட் டி20 தொடரில் இருந்து செல்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட் விளையாடவும் போதுமானவர். நான் அவரது சவாலை ரசித்துக் கொண்டிருந்தேன். எப்படியோ ஒரு பேட்ஸ்மேன் ஆக உலகத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக விளையாட வேண்டும். நான் செய்ய முயற்சித்தது இதுதான்” என்று கூறியிருக்கிறார்.






