83 பந்து.. 13 சிக்ஸ்.. 174 ரன்.. மொத்தம் 416 ரன்.. ஆஸியை அடித்து துவைத்த ஹென்றி கிளாசன்.. தெ.ஆ உலக சாதனை!

0
12374
Klasen

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உள்நாட்டில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி அசுரத்தனமான ஒரு ஆட்டத்தை விளையாடியிருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது. அந்த முடிவு எவ்வளவு பெரிய தவறு என்று, ஆட்டம் 32வது ஓவரை தாண்டு வரை ஆஸ்திரேலியாவுக்கு தெரியவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 45, ரீஸா ஹென்றிக்ஸ் 28, மார்க்ரம் 8 என வெளியேறினார்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராஸி வாண்டார் டெசன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 32 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. இதற்குப் பிறகுதான் மிகப்பெரிய சூறாவளியே ஆட்டத்தில் உருவானது.

தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்றி கிளாசன் முதல் 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அதிரடியின் வேகம் அதிகரித்து. கடைசியில் அவரை எந்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளராலும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

- Advertisement -

இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் ஒரு பக்கம் தன் பங்குக்கு அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். இந்தக் கூட்டணி 88 பந்துகளில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஹென்றி கிளாசன் தன்னுடைய கடைசி 58 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். அவர் ஒட்டுமொத்தமாக 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் என்று 174 ரன்கள் குவித்து, இறுதிப் பந்தில் ஆட்டம் இழந்தார். டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி கடைசி 18 ஓவர்களில் மட்டும் 259 ரன்கள் குவித்து இருக்கிறது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் 400 ரன்கள் கடந்ததின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஏழு முறை 400 ரன்கள் அடித்த அணி என்ற உலகச் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்திருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் பந்து வீசி, விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 113 ரன்கள் விட்டு தந்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் விட்டுத் தந்த வீரர் என்ற வரிசையில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!