அறிமுக டி20ஐ போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற 8 இந்திய வீரர்கள்

0
147
Ishan Kishan and Harshal Patel

டி20ஐ போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அரை சதம் அடித்த வீரர் களுக்கு கூட ஆட்டநாயகன் விருது கிடைக்காமல் போவது பலமுறை நடந்திருக்கிறது. இந்திய அணிக்கு சுமார் 13 ஆண்டுகாலமாக டி20 கிரிக்கெட் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டன் தோனி கூட ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வாங்கியது கிடையாது. அப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத விருதினை தங்களின் முதல் போட்டியிலேயே கைப்பற்றிய 8 இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தினேஷ் கார்த்திக்

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 31 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா நீ கொடுத்த 126 ரன்கள் என்ற இலக்கை அடைய தினேஷ் கார்த்திக்கின் இந்த ஆட்டம் பெரிதும் உதவியதால் முதல் போட்டியிலேயே அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பிரக்யான் ஓஜா

கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் போது பிரக்யான் ஓஜா அறிமுகம் ஆனார். 180 என்ற மிகப்பெரிய டார்கெட்டை வங்கதேச அணி துரத்தும்போது 155 ரன்களுக்கு அந்த அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஓஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சுப்ரமணியம் பத்ரிநாத்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார் சுப்ரமணியம் பத்ரிநாத். இதில் இவர் 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற பெரிதும் உதவினார். அதனால் ஆட்டநாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அக்சர் பட்டேல்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி ஒன்றில் முதன் முறையாக அக்சர் பட்டேல் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடினாலும் அந்த அணியால் 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பரிந்தர் சரண்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கைப்பற்றிய மற்றொரு இந்திய வீரர் சரண். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

நவ்தீப் சைனி

கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அதன்மூலம் இந்திய அணிக்கு இடம் பிடித்தவர். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இவர் முதன் முறையாக இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். இவர் வீசிய 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் சைனி. சைனியின் இந்த சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இஷான் கிஷான்

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார் இஷன் கிஷன். இதில் இவர் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் கிஷன்.

ஹர்ஷல் பட்டேல்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஹர்ஷல் பட்டேல். இதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் நியூசிலாந்து தொடரில் அவருக்கு முதன்முதலாக இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் இவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பங்காற்றினார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்ஷல்.