7+18 சேர்ந்தாலே ஹிட்டு.. தோனியை நினைத்து நள்ளிரவில் ட்வீட் செய்த விராட் கோலி! – பிசிசிஐ கொடுத்த அழுத்தமா??

0
83

நள்ளிரவில் தோனியை நினைத்து ட்வீட் செய்துள்ளார் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமாகி 14 வருடங்களை சமீபத்தில் நிறைவு செய்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையில் நீண்ட நாட்கள் விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர். அது மட்டுமல்லாது, அவருடன் நீண்ட நாட்கள் பயணித்த துணை கேப்டனும் விராட் கோலி தான்.

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அனைத்துவித போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்த விராத் கோலி, கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தனது அனைத்துவித பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது ரோகித் சர்மா அந்த பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ரன்களும் அடிக்கவில்லை. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது, தற்போது இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைப்பதே சிரமமாக இருப்பது என ஏராளமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

பல இன்னல்களை சந்தித்து வரும் விராட் கோலி ஆசிய கோப்பை டி20 தொடரில் இடம்பெற்று விளையாட இருக்கிறார். துபாய் சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நள்ளிரவில் தோனியை பற்றி ட்வீட் செய்திருந்தார். அதில், “தோனியின் நம்பிக்கை பெற்ற துணையாக தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாக உணர்கிறேன். எங்களது பார்ட்னர்ஷிப் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் ஆக இருக்கும். 7 + 18.” என்று பதிவிட்டு இருந்தார்.

7+18 என்பது தோனியின் ஜெர்சி நம்பர் 7 மற்றும் விராட் கோலி ஜெர்சி நம்பர் 18 ஆகும். இவை இரண்டையும் கூட்டி பார்த்தால் 25 வரும். விராட் கோலி ட்வீட் செய்த தேதி 25 என்பதால் அதைப் பார்த்தவுடன் விராட் கோலிக்கு இந்த ஞாபகம் வந்திருக்கலாம் என சிலர் யூகித்து வருகின்றனர்.

தொடர்ந்து ரன் அடிக்காமல் இருப்பதால் சர்வதேச போட்டிகளில் விளையாட விராட் கோலிக்கு இடம் கிடைப்பதில் தீவிர சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ தொடர்ந்து இவருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இந்திய அணியின் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அழுத்தத்தில் இருந்து சிறிது விலகி இருக்க இந்திய அணியில் தனது மிகச் சிறப்பான காலகட்டத்தை விராட் கோலி நினைத்து பார்த்திருக்கலாம். அப்போது தோனியின் துணை கேப்டனாக இருந்தது தனது சிறப்பான காலகட்டமாக அவர் உணர்ந்து இத்தகைய ட்வீட் செய்திருக்கலாம். தொடர்ச்சியாக 7 +18 = 25. அது தேதியுடன் ஒத்துப் போயிருக்கலாம் என இன்னும் சிலர் தனது யூகத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க விராட் கோலி வருகிற டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும் என்றால் நிச்சயம் ஆசிய கோப்பை தொடரில் தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலிலும் இருக்கிறார். ஏனெனில் விராட் கோலி இடத்தை நிரப்புவதற்கு சில இளம் வீரர்களும் இந்திய அணியில் வந்துவிட்டனர் என்பதும் இன்னொரு சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.