6,6,6,0,6.. ருத்ரதாண்டவம் ஆடிய சூரியகுமர் யாதவ் – நான்கு பக்கமும் சிக்ஸர் அடித்த வீடியோ!

0
103

ஹாங்காங் அணிக்கு எதிராக சூரியகுமார் ருத்ரதாண்டவம் ஆடிய விதம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

நடைபெற்று வரும் 15 வது ஆசிய கோப்பை தொடரில இந்திய அணி தனது இரண்டாவது போட்டியை ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதிய போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த பிறகு, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ராகுல்-கோலி ஜோடி 56 ரன்கள் சேர்த்தபோது, கேஎல் ராகுல் 39 பந்துகளுக்கு 36 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தது. நிதானமான விளையாடி வந்த விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். மறுமுனையில் வந்த முதல் பந்தில் இருந்தே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளின் அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள், அதற்கு முந்தைய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கிய சூரியகுமார் ஆட்டத்தின் வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த சூரியகுமார் யாதவ் ஆறு பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் உட்பட 26 பந்துகளில் 68 அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 192 ரன்கள் அடித்திருந்தது.

இமாலய இலக்கை துரத்திய ஹாங்காங் அணி அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடித்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடினர். அதிகபட்சமாக ஹயத் 41 ரன்கள், கிஞ்சித் 30 ரன்கள் அடித்திருந்தனர். கீழ் வரிசையில் சீசன் அலி மற்றும் மெக்கன்சி இருவரும் அதிரடி வெளிப்படுத்த ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் வலுவான நிலையில் இருக்கிறது. மேலும் சூப்பர் ஃபோர் சுற்றும் தகுதி பெரும் வாய்ப்பு பெற்றது.