ஒரு காலகட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடி விட்டு, தற்பொழுது வேறு அணிகளுக்கு விளையாடி வரும் வீரர்கள்

0
881

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து அனைத்து வருடமும் விளையாடி வரும் அணிகளின் மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அடங்கும். இதுவரை 13 வருடங்களாக
ஐபிஎல் தொடர் விளையாடி முடித்துள்ள பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது.

நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக ஒவ்வொரு தொடரிலும் விளையாடி வரும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2009, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆர்சிபி தவறவிட்டுள்ளது.அந்த அணியில் விளையாடிய ஒரு சில முன்னாள் வீரர்கள் தற்போது நடப்பு ஐபில் தொடரில் மற்ற அணிகளுக்கு விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

செத்தேஷ்வர் புஜாரா

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக கருதப்படும் சீனியர் கிரிக்கெட் வீரரான இவர், இதுவரை மொத்தமாக 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் 20.53 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 99.74 ஆகும்.

புஜாரா 2011ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மொத்தமாக மூன்று ஆண்டுகள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடினார். முன்னாள் பெங்களூரு அணி வீரரான இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கே எல் ராகுல்

இனிவரும் நாட்களில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திர கிரிக்கெட் பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கும் கே எல் ராகுல், 2013 மற்றும் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த ஆண்டு முதல் தற்போது வரை கே எல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும் இவரே. இதுவரை மொத்தமாக 89 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3027 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் 46.57 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 136.04 ஆகும்.

மயங்க் அகர்வால்

இவர் தன்னுடைய ஐபிஎல் கேரியரை பெங்களூரு அணியிலேயே தொடங்கினார். கேஎல் ராகுலின் ஜிகிரி தோஸ்த்தான இவர் 2013ம் ஆண்டு கே எல் ராகுல் உடன் இணைந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார். அதன் பின்னர் டெல்லி மற்றும் புனே அணிகள் விளையாடி விட்டு, ராகுலை போலவே 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இவர், தன்னுடைய ஜிகிரி தோஸ்த்தான கே எல் ராகுல் உடன் இணைந்து பஞ்சாப் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக இவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் 96 போட்டிகளில் விளையாடி 2021ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 23.23 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 136.0 ஆகும்.

ஜெயதேவ் உணத்கட்

இவரது பெயரை கேட்ட மாத்திரத்தில் அனைவருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை அதிக தொகை கொடுத்து ஒவ்வொரு முறை ஏலத்தில் வாங்கியது தான் நினைவுக்கு வரும். இவர் 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆவார்.

அந்த ஒரு ஆண்டு மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய இவர், அதன் பின்னர் டெல்லி, கொல்கத்தா மற்றும் புனே அணிகள் விளையாடி விட்டு 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரை மொத்தமாக 84 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது பந்துவீச்சு எக்கானமி 8.73 மற்றும் ஆவரேஜ் 29.8 ஆகும்.

தினேஷ் கார்த்திக்

2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 12 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் ஏலத்தில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக தொகை குடுத்து வாங்கப்பட்ட ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மட்டுமே.

பெரும் தொகைக்கு அவரை அந்த ஆண்டு வாங்கிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதற்கு அடுத்த ஆண்டே தங்களது அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றியது. பெங்களூர் அணியில் இருந்து வெளியே வந்த தினேஷ் கார்த்திக் இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியில் விளையாடி விட்டு, 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

இதுவரை மொத்தமாக 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 3946 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 26.13 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.89 ஆகும்.

பவன் நெகி

இடதுகை ஆல்ரவுண்டர் வீரரான இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இடம்பெற்று விளையாடினார். கடந்த ஆண்டு வரை பெங்களூர் அணியில் இடம் பெற்று விளையாடிய இவர், தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் பேட்டிங்கில் 365 ரன்கள் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சில் 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேற்கூறிய முன்னாள் ஆர்சிபி வீரர்கள் மத்தியில் புஜாரா மற்றும் நெகியை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். புஜாரா மற்றும் நெகி இவர்கள் இருவர் மட்டும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்காமல், தங்களது வாய்ப்புக்காக காத்து இருக்கின்றனர்.