அடுத்த இரு ஆட்டங்களில் சென்னை அணி வாய்ப்பளிக்க வேண்டிய 5 இளம் வீரர்கள் இவர்கள் தான்

0
2048
Jagadeeshan and Hangarekar CSK

நடப்பு ஐ.பி.எல் தொடரில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடனான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்று, ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்கிறது. மீதம் உள்ள இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பளிக்கப்படாத புதிய வீரர்களுக்கு வாய்ப்பை தந்து, அடுத்த ஐ.பி.எல் சீசனுக்கான ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

ஐ.பி.எல் போட்டி களத்தையே, அடுத்த ஐ.பி.எல் சீசனுக்கான பரிசோதனை களமாகப் பயன்படுத்தி பார்ப்பது என்பது மிகச்சிறந்த வாய்ப்பு. பொலார்டுக்குப் பதிலாக இளம் தென்ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸை மும்பை களமிறக்கியதைப் போல் சென்னை அணி செய்ய வேண்டும். சென்னை அணி எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு தரலாம், அவர்களுக்கு வாய்ப்பு தருவதின் அவசியம் என்ன என்பது பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

என். ஜெகதீசன்

தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான இவர், உள்நாட்டு போட்டிகளில் வெள்ளைப்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தோனி, உத்தப்பா, அம்பதி ராயுடு போன்ற வீரர்கள் ஓய்வுபெறும் போதோ இல்லை ஆட முடியாமல் போகும் போதோ, இவருக்கு வாய்ப்பளித்துக் களத்தைப் பழக்கப்படுத்தி, நம்பிக்கையூட்டி வைப்பது அவசியமாகிறது.

மதிஷா பதிரணா

இலங்கை அன்டர் 19 வலக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நல்ல வேகத்தில் மலிங்காவின் பாணியில் வீசக்கூடியவர். ஆடம் மில்னேவின் காயத்தால் உள்ளே வந்திருக்கும் இவருக்கு வாய்ப்பளித்துப் பரிசோதிப்பது வெற்றியடைந்தால், வேகமும், மலிங்கா பாணியில் யார்க்கர், பிலாக்-ஹோல் பந்துகளை வீசும் இவர், இருபது ஓவர் போட்டிக்குத் தகுந்த வீரராக இருப்பார். இறுதிக்கட்ட ஓவர்களில் இவரது பங்களிப்பு முக்கியமானதாய் இருக்கும். அடுத்த ஐ.பி.எல் சீசனில் வல-இடக்கை ஸ்விங் வேகப்பந்து வீச்சு கூட்டணியாக தீபக் சாஹர், முகேஷ் செளத்ரி வரும் போது, இறுதிக்கட்ட ஓவர்களில் இவர் தேவைப்படுவார்!

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

இந்திய அன்டர் 19 அணி கொரோனோவுக்கு மத்தியில் உலகக்கோப்பையை வென்றதில் இவரது வேகப்பந்து வீச்சும், இறுதிக்கட்ட அதிரடிக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கிறது. இன்-ஸ்விங் யார்க்கர், பிலாக்-ஹோல் பந்துகளை மணிக்கு 140கி.மீ மேல் வீசும் இவர், பேட்டிங்கிலும் அதிக தூர சில சிக்ஸர்களை விளாசும் திறன் பெற்றவர். இவருக்கு வாய்ப்பளித்து பட்டைத்தீட்டினால், அடுத்த இரண்டு சீசன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்ட வேகப்பந்து வீச்சு படையை உருவாக்கி, வெளிநாட்டு ஸ்பின்னர்கள், பேட்ஸ்மேன்களை கொண்டு, ஒரு வலிமையான ஆடும் அணியை வடிவமைக்கலாம்.

சுப்ரன்சு சேனாபதி

ஒரிஷாவைச் சேர்ந்த இந்த வலக்கை மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன், அம்பதி ராயுடு, உத்தப்பாவிற்கு சிறந்த மாற்று வீரராக இருப்பார். செய்ய வேண்டியதெல்லாம் வாய்ப்பு தந்து பட்டைத் தீட்டுவதுதான். 26 இருபது ஓவர் போட்டிகள் ஆடியிருக்கும் இவருக்கு 30க்கு நெருக்க ரன் சராசரியும், 122 ஸ்ட்ரைக் ரேட்டும் இருக்கிறது. அணிக்கு சராசரியான ஒரு பங்களிப்பைத் தரக்கூடிய வீரராகவே தெரிகிறார். வாய்ப்புகளும் இதன் மூலமான அனுபவங்களும், இவரது ரன் சராசரியையும், ஸ்ட்ரைக்ரேட்டையும் அதிகமாக்கலாம்.

ஹரி நிஷாந்த்

தமிழகத்தைச் சேர்ந்த இடக்கை துவக்க வீரர். வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிரடியாய் ஆடக்கூடியவர், இருபது ஓவர் போட்டிகளுக்கு ஏற்ற வீரர். ருதுராஜ்-கான்வோ ஆட்டத்தைத் துவங்கினாலும், பேட்டிங் மூன்றாம் வரிசையில் களமிறங்கி, சுரேஷ் ரெய்னாவின் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தரலாம். ஜெய்ஷ்வால் இருக்க படிக்கல்லை எடுத்து ராஜஸ்தான் பயன்படுத்துவதைப் போல இவரைச் சென்னை அணி பயன்படுத்தலாம். பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் ஒரு அதிரடி இடக்கை வீரர் இருப்பது அணிக்கு நல்ல விசயமே!