தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் இடம் பிடிக்காத 6 தகுதியான வீரர்கள்

0
7153
Thangarasu Natarajan and Rahul Tripathi

2022 ஐபிஎல் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் பிளே ஆப் சுற்று போட்டிகள் மட்டுமே பாக்கியுள்ளன. குஜராத், ராஜஸ்தான், லக்னோ & பெங்களூர் அணிகள் அந்தக் கோப்பைக்காக மோதவுள்ளன. இந்த மாதத்துடன் ஐபிஎல் திருவிழா நிறைவுபெறும் நிலையில் தற்போது பிசிசிஐ அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்ரிக்கா டி20ஐ தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஜூன் 9 முதல் 19 வரை மொத்தம் 5 போட்டிகளில் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

முன்னணி வீரர்கள் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல் தலைமை தாங்குகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் பல இளம் நட்சத்திரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்தனர். அவர்களில் உம்ரான் மாலிக் & அர்ஷ்தீப் சிங் புதிதாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அவர்கள் தவிர மற்ற சில வீரர்களும், இந்த அணியில் இணைய தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -
ராகுல் திரிப்பாத்தி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர் இவர் தான். 13 போட்டிகளில் 393 ரன்கள் சேர்த்துள்ளார். கேப்டன் கேன் வில்லியம்சன் தடுமாறியப் போதும் நிலைத்து நின்று விளையாடியுள்ளார். அத்தகு சிறப்பான ஃபார்மில் இருக்கும் இவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவர் இந்திய அணியில் தன் இடத்தை இழந்து விட்டார் என்று சொல்வதை விட இந்திய அணி தான் இவரை இழந்து விட்டது என்று கூறுவதே சரியாக இருக்கும்.

சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தன் சிறப்பான கேப்டன்சி திறனால் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பேட்டிங்கிலும் தேவைப்பட்ட போது அதிரடியாக ஆடி அணிக்கு பங்காற்றியுள்ளார். முக்கியமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லாத வேளையில் அவரின் பணியை சிறப்பாக செய்யக் கூடிய அனுபவம் வாய்ந்த வீரர் இவர் தான். பிசிசிஐ இவரை தேர்வு செய்யாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராசு நடராஜன்

காயத்தில் இருந்து மீண்டு வந்து அபாரமான கம்பேக் கொடுத்தார் தங்கராசு நடராஜன். 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். ஹைதராபாத் அணிக்காக முக்கியமான நேரத்தில் தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஜாகிர் கானுக்குப் பின் இந்திய அணியில் நிரந்தர இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரும் பெரிதாக அமையவில்லை. அதை நடராஜன் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம். ஆனால் பிசிசிஐ அதை விரும்பவில்லை போலிருக்கிறது. இவரை எடுக்காததால் நஷ்டம் இந்திய அணிக்கு தான்.

- Advertisement -
மோஷின் கான்

2022 ஐபிஎல் தொடரில் பலரை வியக்க வைத்த இளம் வீரர்களில் இவரும் ஒருவர். லக்னோ அணியைச் சேர்ந்த இந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தன் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இவரது உயரம் கூடுதல் பலத்தை ஊட்டுகிறது. இவர் நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ அணியில் இடம் பிடிப்பார் என செய்திகள் பரவியது. ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப் படவில்லை.

க்ருனால் பாண்டியா

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் இருவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், இந்த ஆண்டு அகஷர் பட்டேல் சிறப்பாக விளையாடத் தவறியதால் க்ருனால் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இம்முறை இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அணியில் இருந்த வெளியேற்றப்பட்ட ஹார்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 8 மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதில் இருந்து மீண்டு வந்து இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர், பீல்டிங் செய்யும் போது மீண்டும் காயம் அடைந்தார். இதனால் பாதியிலேயே தொடரை விட்டும் விலகினார். திறன் இருந்தும் காயத்தால் வாய்ப்புக் கை மீறிச் செல்வது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.