ஐபிஎல் தொடர் ஆரம்பித்து 13 ஆண்டுகள் கடந்தும் முதல் வருடம் முதல் இன்று வரை மாறாமல் இருக்கும் ஒரு சில விஷயங்கள்

0
2659
Brendon McCullum and Virat Kohli

2007ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. டி20 கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆரவாரமும், எதிர்பார்ப்பும் படிப்படியாக உயர தொடங்கியதை கண்ட பிசிசிஐ, அதற்கு அடுத்த ஆண்டே இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்கிற பெயரில் டி20 தொடரை தொடங்கியது.

இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட பொழுது உலக அளவில் இது பின்னாளில் பிரபலமாகும் என்றும், உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக இது தனி பெயரை சம்பாதிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. 13 வருடங்களைக் கடந்தும், இன்று வரை ஐபிஎல் தொடர் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்று கொண்டே தான் இருக்கிறது. இந்த தொடர் மூலமாக பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது அணிக்காக சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

அப்பேர்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் வருடா வருடம் சாதனைப் பெயர் பட்டியலில் வீரர்களின் பெயர் இடம் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஒரு சில குறிப்பிட்ட சாதனைகள் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்படி மாறாமல் இருக்கும் ஒரு சில சாதனைகளைப் பற்றி தற்போது பார்ப்போம்.

சர்வதேச அளவில் விளையாடாமல் ஆரஞ்சு தொப்பியை வென்றவர்

ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப் மிக முக்கிய சாதனையாக பார்க்கப்படும் ஒன்று. ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு தொடர் முடிவில் ஆரஞ்சு கேப் வழங்கப்படும். இந்த ஆரஞ்சு தொப்பியை பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் வாங்கி உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் ,மேத்யூ ஹைடன், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட்கோலி, கேஎல் ராகுல் என பல்வேறு வீரர்கள் வாங்கியிருக்கின்றனர்.

இருப்பினும் 2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஆரஞ்சு தொப்பியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷான் மார்ஷ் வாங்கினார். 2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய அவர் 11 போட்டிகளில் 616 ரன்கள் குவித்திருந்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அவர் ஐபிஎல் தொடரில் அந்த வருடம் விளையாடி முடித்த பின்னரே, ஆஸ்திரேலிய அணியில் சர்வதேச அளவில் இடம்பெற்று விளையாடினார்.

இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச அளவில் விளையாடாமலையே, ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே வீரர் என்கிற சாதனையை ஷான் மார்ஷ் இன்று வரை தக்க வைத்திருக்கிறார்.

கொல்கத்தா அணிக்காக சதம் அடித்த ஒரே வீரர்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய பிரண்டன் மெக்கல்லம் சதம் அடித்து மிரட்டினார். அந்த போட்டியில் 73 பந்துகளில் 13 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட இறுதி வரை ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்தார்.

அந்தப் போட்டியில் இருந்து இன்றுவரை கொல்கத்தா அணிக்காக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் ஒற்றை ஆளாக நிற்கிறார் என்பது தான் வேடிக்கையான கதை. கொல்கத்தா அணிக்காக கடந்த 13 வருடங்களில் சௌரவ் கங்குலி, கௌதம் கம்பீர், ஜாக்ஸ் காலிஸ், ரஸல் என பல்வேறு அதிரடி வீரர்கள் விளையாடி நிலையிலும் அவரை தவிர வேறு எந்த வீரரும் இன்றுவரை கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தது கிடையாது.

இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பிரண்டன் மெக்கல்லம் இன்று வரை தக்க வைத்திருக்கிறார்.

முதல் ஐபிஎல் தொடரிலிருந்து ஒரே ஓனரை கொண்ட அணி

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த வருடம் முதல் இன்று வரை ஒவ்வொரு அணியின் ஓனர்கள் ஒரு சில வருடங்களில் மாறி இருக்கின்றனர். ஆனால் 2008 முதல் இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரே ஓனராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 2008 முதல் 2012 வரை எந்த ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றவில்லை. 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் 5 முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரிலேயே ஆகச் சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஐபிஎல் தொடரிலிருந்து ஒரே கேப்டனை கொண்ட அணி

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட வருடம் முதல் இன்று வரை மற்ற அணிகளின் கேப்டன்கள் ஒரு பக்கம் மாறிக்கொண்டு வந்த நிலையில், சென்னை அணியில் மட்டும் அந்த மாற்றம் நிகழவில்லை. 2008 முதல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021க்காண ஐபிஎல் தொடர் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தொடர்ச்சியாக ஆண்டுகள் கடந்து தலைமை தாங்கி வருகிறார்.

அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு சாதனைகளை ஐபிஎல் தொடரில் நிகழ்த்தி காட்டி இருக்கிறது. பதினோரு வருடங்கள் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி எட்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாகவும் சென்னை அணி திகழ்கிறது. எட்டுமுறை முன்னேறிய அந்த அணி மொத்தம் மூன்று முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

முதல் ஐபிஎல் தொடரிலிருந்து ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட பொழுது, டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி அண்டர் 19 அணியில் கேப்டனாக இருந்தார். டெல்லி அணி நிர்வாகம் 2008க்கான ஐபிஎல் ஏலத்தில், அவரை வாங்க முன்வரவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானை டெல்லி அணி வாங்கியது.டெல்லி அணியால் வாங்கப்படாத விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலி தற்போது வரை விளையாடி வருகிறார்.

வீரராக உள்ளே வந்து பின்னர் கேப்டனாகி பல்வேறு சாதனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோலி நிகழ்த்தி காட்டியிருக்கிறார். ஒரே தொடரில் அதிக ரன்கள் (973 ரன்கள்) குவித்த வீரராகவும், சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட வீரராகவும் விராட் கோலி அடுக்கடுக்கான சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் முதல் வருடம் முதல் இன்று வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்கிற சாதனையை விராட் கோலி தக்க வைத்திருக்கிறார்.