நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத 5 முக்கிய வீரர்கள்

0
72
Thangarasu Natarajan and Shardul Thakur

இந்திய அணியின் டி20 உலக கோப்பை தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. கோப்பையை வென்று வெற்றியுடன் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி அரையிறுதி சுற்றுக்கு கூட செல்லாமல் திரும்பியுள்ளது. இதனால் அணியை சீரமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலும் ரவிசாஸ்திரி பயிற்சியிலும் விளையாடிய இந்திய அணியின் காலம் முடிவுக்கு வந்துள்ளதால் ரோஹித்தின் தலைமையிலும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி அடுத்த இன்னிங்சை ஆரம்பித்துள்ளது. ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்பு ஆடப்போகும் முதல் தொடர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர். இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது இதில் தேர்வு ஆகாத ஐந்து முக்கியமான வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

சஞ்சு சாம்சன்

தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிடால் செதுக்கப்பட்ட ஒருவர் சஞ்சு சாம்சன். இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஏதுமில்லாமல் 11 ஆட்டங்களில் 481 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனாலும் இந்திய அணி ஸ்ரேயாஸ், சூரியகுமார் போன்றவர்களை தேர்வு செய்ததால் இவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

அர்ஷ்தீப் சிங்

இந்திய அணியின் நீண்டகால பிரச்சனையான இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதற்காக சிறந்த பதிலாக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இருக்க முடியும். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பல வேரியேஷன்கள் மூலம் விக்கெட் எடுத்த இவரை இந்திய அணி கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சரியம் தான்.

ஷர்துல் தாகூர்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்று அசத்தியவர் தாகூர். இதனால் உலக கோப்பை அணியில் கூட இடம் பிடித்தார். ஆனால் உலக கோப்பையில் நினைத்த அளவு சிறப்பாக பந்து வீச முடியாத காரணத்தினால் இந்த நியூஸிலாந்து தொடருக்கு அவர் சேர்க்கப்படவில்லை. இருந்தாலும் இந்திய மைதானங்களில் இவரின் ஆல்ரவுண்டர் திறமை அணிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பதால் இவரை அணியில் சேர்த்திருக்கலாம் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

வருண் சக்ரவர்த்தி

தமிழகத்திலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வாகி தனது வித்தியாசமான சுழற்பந்து வீச்சு மூலமாக அசத்தியவர் வருண் சக்கரவர்த்தி. டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இருந்தாலும் ஒரு தொடர் முடிந்தவுடன் ஏ அணியில் இருந்து நீக்கப்படுவது அவரின் தன்னம்பிக்கையை குறைத்துவிடும் என்பதை கருத்தில் கொண்டாவது நியூஸிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

நடராஜன்

எளிமையான பின்புலத்தில் இருந்து கடந்த ஆண்டு இந்திய அணிக்கு தேர்வானவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். குறுகிய காலத்திலேயே மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அசத்தி இந்திய அணியின் வருங்கால வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று பலரும் அவரை நினைத்தனர். ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது சையது முஷ்டாக் தொடர் விளையாடி வரும் இவரை நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைத்திருக்கலாம்.