2012 டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய வீரர்களின் தற்போதைய ஐ.பி.எல் அணிகள்

0
2624
Shikar Dhawan and Daniel Christian

இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சாம்பியன் என்று டெக்கான் அணி தங்களை அழைத்துக்கொள்ளலாம். பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜெர்ஸ் அணி 2009ல் வீழ்த்தி கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டது. தென்னாபிரிக்கா ஆடுகலங்களில் நடந்த ஒரே ஐ.பி.எல் தொடர் இது தான். 2008 முதல் 2012 வரை மொத்தம் 5 சீசனில் அவ்வணி பங்கேற்றது.

துரதிஸ்டவசமாக, 2013ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பிசிசிஐ தடை செய்தது. அதற்கு பதில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகமானது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் பல நட்சத்திர வீரர்கள் ஆடினார். குமார் சங்கக்காரா, விவிஎஸ் லக்ஷ்மன், ரோஹித் ஷர்மா, ஆதம் கில்கிறிஸ்ட், ஷாஹித் அப்ரிடி, ஆண்ட்ரு சைமண்ட்ஸ் மற்றும் பலர். 2012ல் டெக்கான் அணியில் ஆடிய ஒரு சில வீரர்கள் இன்னுமும் ஐ.பி.எலில் விளையாடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

- Advertisement -

டேனியல் கிறிஸ்டியன்

2012 ஐ.பி.எலில், கிறிஸ்டியன் தன்னுடைய ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தினார். அவ்வாண்டு அவர் 7 போட்டிகளில் கலந்துக் கொண்டார். பேட்டிங்கில் 145 ரன்கள் பவுலிங்கில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அமார்களப்படுத்தினார். அதற்கு அடுத்தடுத்த சீசனில் அவர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிகளுக்காக ஆடினார்.

சர்வதேச அளவிலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நடந்த பிக் பேஷ் லீக்கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார். அவரின் ஆட்டத்தைக் கண்டு வியந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகமும் அவரை ஏலத்தில் வாங்கியது.

ஷிகர் தவன்

2012 ஐ.பி.எல் தொடர், தவானுக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்தது. 15 இன்னிங்சில் 569 ரன்கள் குவித்தார். அதில் 5 அரை சதங்களும் அடங்கும். அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்கு நகர்ந்தார். வார்னரும் தவானும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

- Advertisement -

2019 சீசனிற்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணி தவானை டிரேட் செய்துகொண்டது. சென்ற ஆண்டு இரண்டு சதங்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்தார். நடப்பு தொடரிலும் டி20 உலகக் கோப்பை முன்னேற வேண்டுமெனும் நோக்கத்தோடு சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.

அமித் மிஷ்ரா

மிஷ்ரா ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஸ்பின்னர். அமித் மிஷ்ரா, மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெல்லி, டெக்கான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக இதை அவர் நிகழ்த்தினார். மூன்று வேறு அணிகளுக்காக ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2012ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 14 போட்டியில் 13 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின்னர் ஹைதராபாத் அணியில் இணைந்தார். ஷிகர் தவானைப் போல இவரும் டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் அவர் சிறப்பாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் ஷர்மா

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு டெல்லி கேபிடல்ஸ் வீரர் இஷாந்த் ஷர்மா. 2012 ஏலத்திற்கு முன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியால் அவர் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில் கூட கலந்துக்கொள்ள இயலவில்லை.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல அணிகளுக்கு மாறிக்கொண்டே இருந்தார். பஞ்சாப், ஹைதராபாத், புனே அணிகளுக்கு ஆடிய பிறகு தற்போது டெல்லி அணியில் இணைந்துள்ளார். 2021 ஐ.பி.எலின் முதல் பாதியில் அவருக்கு ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன.

கிறிஸ் லின்

அதிரடி ஒப்பனர் கிறிஸ் லின் தன்னுடைய அறிமுக ஐ.பி.எல் போட்டியை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடினார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. 2012ல் ஒரே ஒரு போட்டியில் ஆடிய லின் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன் பின்னர், அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

கே.கே.ஆர் அணியில் சிறப்பாக ஆடி நட்சத்திர வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார். 2020ம் ஆண்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்தது. ஆனால் அவ்வாண்டு அவர் ஒரு போட்டியில் கூட கலமிறங்கவில்லை. நடப்பு தொடரின் முதல் போட்டியில் டி காக் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தார். ஆகையால் முதல் போட்டியில் மட்டும் லின் களமிறங்கினார். பின்னர் வழக்கம்போல் பெஞ்சுக்கு சென்றுவிட்டார்.