டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதைப் பகிர்ந்துகொண்ட 5 ஜோடிகள்

0
186
Steyn Morkel and Harbhajan Hayden

வெற்றிக்கு வரிந்துகட்டும் இரு அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். பெரும்பாலும் வெற்றிக்கு உதவிய வீரருக்கு தான் அவ்விருது அளிக்கப்படும். ஆனால் ஒரு சில முறை அதற்கு மாறாகவும் நடந்திருக்கிறது. அதாவது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியும் தோல்வியை தழுவிய வீரர்களும் விருதைத் தட்டிச் சென்றுள்ளனர்.

ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்ப்பட்ட வீரர்கள் அற்புதமாக ஆடும் நிலையில், ஆட்டநாயகன் விருது யாருக்கு அளிப்பது என்ற குழப்பம் வர்னையாளர்களுக்கு ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 14 முறை ஒரே அணியைச் சேர்ந்த இரு வீரர்களும், 26 முறை இரு அணியின் சிறந்த பங்களிப்பாளர்களும் ஆட்டநாயகன் விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருதைப் பகிர்ந்துகொண்ட 5 ஜோடிகளைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

ஆண்டி பிளவர் & கிராண்ட் பிளவர் – 1995

கடந்த காலங்களில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடியது. அதற்கு முக்கிய காரணம் பிளவர் சகோதரர்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கிராண்ட் பிளவர் இரட்டைச் சதமும் ஆண்டி பிளவர் 156 ரன்களும் விளாசினர். ஜிம்பாப்வே அணி அப்போட்டியை வெல்ல, இவ்விருவர்களும் முதுகெலும்பாக பணியாற்றினர். போட்டி முடிந்த பிறகு இருவருக்கும் ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

ரவி சாஸ்திரி & ஜான் ரைட் – 1981

ஆக்லாந்து மைந்தானதில் 1981ம் நடந்த இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்டில் ஜான் ரைட் மற்றும் ரவி சாஸ்திரி இருவர்களும் ஆட்டநாயகன்களாக அறிவிக்கப்பட்டனர். நியூசிலாந்து வீரர் ஜான், பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தினார். ரவி சாஸ்திரி பவுலிங்கில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி அப்போட்டியை டிரா செய்ய உதவினார்.

ஷான் பொல்லாக் & மார்க் பவுச்சர் – 1999

ஆல்ரவுண்டர் பொல்லாக் மற்றும் விக்கெட் கீப்பர் பவுச்சர், இருவரும் தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் வீரர்கள். ஒரு முறை இந்த இரண்டு வீரர்களும் ஆட்டநாயகன் விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 1999ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பொல்லாக் 7 விக்கெட்டுகள் மற்றும் அரைசதம் அடித்தார். மார்க் பவுச்சரும் தன் பங்கிற்கு சதம் விளாசியதோடு ஒரு சில முக்கிய கேட்ச்களும் எடுத்தார். அப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

டேல் ஸ்டெயின் & மார்னே மார்க்கல் – 2010

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு தென்னாபிரிக்க ஜோடி, ஸ்டெயின் மற்றும் மார்க்கல் ஆவர். 2010ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில், இவ்விரு வேகப்பந்து வீச்சாளர்கள் தான் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இருவரும் தலா 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றனர்.

ஹர்பஜன் சிங் & மாத்யூ ஹைடன் – 2001

2001 ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடரில் பல இந்திய அணி வீரர்களின் திறன் வெளிவந்தது. முக்கியமாக ஹர்பஜன் சிங், தொடர் முழுவதும் அற்புதமாக பந்துவீசினார். சென்னையில் நடந்த டெஸ்ட்டில், இந்திய அணி சார்பில் ஹர்பஜனும் ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹைடனும் சிறப்பாக ஆடினர். இந்திய ஸ்பின்னர் பஜ்ஜி 15 விக்கெட்டுகள் எடுத்தார் ; ஹைடன் இரட்டைச் சதம் விளாசினார். போட்டி டிராவில் முடிய, இருவீரர்களுக்கும் ஆட்டநாயகன்ககளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.