அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு அகமதாபாத் குறிவைக்கவுள்ள 5 முன்னாள் குஜராத் லயன்ஸ் வீரர்கள்

0
508
Dinesh Karthik and Suresh Raina in GL

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் கூடுதலாக களம் இறங்கி விளையாட போகின்றன. இந்த இரண்டு புதிய அணிகளுக்காண ஏலம் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் 5,600 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறுபக்கம் லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் 7090கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இந்த இரண்டு அணிகளும் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக ஏதேனும் மூன்று வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. இரண்டு இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த இரண்டு அணி நிறுவனங்களும் பிசிசிஐ கொடுத்துள்ளது. அதேசமயம் பழைய எட்டு அணிகள் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து 3 முதல்4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்த கதை. அதன் அடிப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அகமதாபாத் அணி பழைய குஜராத் அணையிலிருந்து, குறிப்பிட்ட ஒரு 5 வீரர்களை தற்பொழுது தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சுரேஷ் ரெய்னா

குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா விளையாடினார். அந்த அணிக்காக 29 போட்டிகளில் 841 ரன்கள் குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சென்னை அணியில் ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. தற்போது நல்ல ஃபார்மில் இல்லாத அவரை அடுத்த ஆண்டு சென்னை அணி தக்க வைக்க வாய்ப்பு இல்லை.

எனவே நிச்சயமாக அகமதாபாத் அணி சுரேஷ் ரெய்னாவை வாங்குவதில் ஆர்வம் காட்ட அதிக வாய்ப்பு உள்ளது. இவருக்கான ஆரம்ப தொகையும் மிகவும் குறைவாக இருக்கும். ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவத்தை வைத்திருக்கும் இவருக்கு 34 வயது தான் ஆகிறது. இவர் இன்னும் சில ஆண்டுகள் கேப்டனாக ஒரு அணியை தலைமைதாங்குவதற்கும் ஏற்ற ஒரு வீரராகக் காணப்படுகிறார். இந்த காரணங்களின் அடிப்படையில் நிச்சயமாக அகமதாபாத் அணி இவரை வாங்க முயற்சி செய்யும்.

இஷான் கிஷன்

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். சுரேஷ் ரெய்னா தலைமையில் 2 ஆண்டுகள் இவர் குஜராத் அணியில் விளையாடி இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும் இவர் சர்வதேச அளவில் இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார். நாளுக்கு நாள் உடைய பேட்டிங் திறமை மெருகேறி கொண்டு போகிறது. எனவே அடுத்த ஆண்டு மும்பை அணி இவரை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த அணி இவரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அகமதாபாத் அணிக்கு நல்ல செய்தியாக அமையும்.

மிக இளம் வயது இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடும் திறமை இவரிடம் இருக்கிறது. எனவே அகமதாபாத் அணியின் இவரை தற்பொழுது வாங்குவதன் மூலமாக, இன்னும் ஒரு சில ஆண்டுகள் அந்த அணி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குறித்து எந்தவித கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

டுவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான டெத் பவுலிங் வீச்சாளரான டுவைன் பிராவோ நிறைய டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர். இவரும் குஜராத் லயன்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகள் மிக சிறப்பாக விளையாடினார்.

அடுத்த ஆண்டு நிச்சயமாக சென்னை அணி இவரை தக்கவைக்க வாய்ப்பே இல்லை. இவருக்கு முப்பத்தி எட்டு வயதான காரணத்தினால் நிச்சயமாக அந்த அணி இது சம்பந்தமாக யோசனை கூட மேற்கொள்ளாது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அகமதாபாத் அணி இவரை வாங்க முயற்சி செய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம். பவுலிங் மற்றும் பேட்டிங் என சிறப்பாக விளையாடும் இவர் ஆல்ரவுண்டர் வீரராகவும் அணியில் தன்னுடைய பங்களிப்பை வழங்குவார்.

தினேஷ் கார்த்திக்

குஜராத் அணிக்காக இரண்டு ஆண்டுகளில் 30 போட்டிகளில் 696 ரன்களை இவர் குவித்திருக்கிறார். டி20 போட்டியில் நல்ல அனுபவத்தை வைத்திருக்கும் இவர் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை. நிச்சயமாக இவரது பெயர் ஏல பட்டியலுக்கு வரும். மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் இடங்களில் மிக சிறப்பாக விளையாடும் திறமை இவருக்கு உள்ள காரணத்தினால், அகமதாபாத் அணி நிர்வாகம் இவரை வாங்க போட்டி போடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

புதிய அணிக்கு நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் நிச்சயமாகத் தேவை. அதுமட்டுமின்றி கேப்டனாக இவர் கொல்கத்தா அணியை சில போட்டிகளில் தலைமை தாங்கி இருக்கிறார். எனவே நல்ல வீரர் மற்றும் நல்ல கேப்டனாகவும் விளையாடும் தகுதி பெற்ற இவரை அகமதாபாத் அணி கைப்பற்ற அதிக அளவில் முயற்சி செய்யும்.

ஜேசன் ராய்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஓபனிங் வீரரான இவர் தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கிறார். சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் நல்ல பேட்டிங் ரெக்கார்டு வைத்திருக்கும் இவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாக நாம் கூறி விட முடியாது. அந்த அணியில் ரஷித் கான் மற்றும் கேன் வில்லியம்சன் இருக்கையில் இவரை நிச்சயமாக அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அகமதாபாத் அணி இவரை வாங்க முயற்சி செய்யும். எப்பொழுதும் ஒரு அணியில் ஓபனிங் வீரர் நன்கு அதிரடியாக விளையாடினால் மட்டுமே மிகப் பெரிய ஸ்கோர் வரும். அந்த திறமை இவருக்கு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இவரை அகமதாபாத் அணி கைப்பற்ற முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.