5 வருடம் கழித்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
3252
Jason Holder and Ravichandran Ashwin

2022 ஐ.பி.எல் தொடரில் நடப்புச் சாம்பியன்களாக சி.எஸ்.கே நுழைகின்றனர். கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் மெகா ஏலம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன் அந்தந்த அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜடேஜா, எம்.எஸ்.தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை வைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் விடுவித்தது. அடுத்து நடக்கவிருக்கும் மெகா ஏலம் தான் கடைசி பெரிய ஏலம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆகையால் இப்போதே பலமான அணியை உருவாக்க அனைத்து அணி நிர்வாகிகளும் எண்ணுவர். 2022 ஐ.பி.எலுக்கு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பவுள்ள 5 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

ஜேசன் ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், மாற்று வீரராக களமிறங்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தன் சிறப்பைக் கொடுத்தார். கடந்த 2 சீசனில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. மேலும், டி20 உலககோப்பை அணிக்கும் அவர் திரும்பினார். ஹைதராபாத் நிர்வாகம் இவரைத் தக்க வைக்க தவறியுள்ளது. ஆல்ரவுண்டரான ஹோல்டர் சென்னை அணிக்கு திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சி.எஸ்.கேவுக்காக 6 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் வீழ்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்தியன் ஆல்ரவுண்டர் ரவி அஷ்வின், டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக பந்துவீசி லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் தன் கம்பேக்கை அறிவித்தார். அதற்கு அடுத்து நடந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் துல்லியமாக செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அடுத்த ஆண்டு ஐ.பி.எலுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி இவரைத் தக்க வைக்கவில்லை. அஷ்வின், சென்னை அணிக்காக 97 போட்டிகளில் 90 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

டிம் சவுதி

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தன் ஐ.பி.எல் கேரியரை சென்னை அணியில் இருந்து தான் தொடங்கினார். சி.எஸ்.கே அணிக்காக வெறும் 5 போட்டிகளில் மட்டுமே களமிறங்கி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சென்ற ஆண்டு ஏலத்தில் இவரை வாங்க யாரும் முன்வரவில்லை. பின்னர் கே.கே.ஆர் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டதால், மாற்று வீரராக சவுதி சேர்த்துக் கொள்ளப்பட்டார். அனுபவம் வாய்ந்த வீரரான இவரை வாங்க சென்னை நிர்வாகம் முன்வர வாய்ப்புள்ளது.

கிறிஸ் மோரிஸ்

ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் கிறிஸ் மோரிஸ். சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 16.25 கோடிக்கு வாங்கியது. கொடுத்த தொகைக்கு ஏற்ப மோரிஸால் பங்களிக்க இயலவில்லை. அதனால் ஆர்.ஆர் நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை. இந்த தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர் தன் முதல் ஐ.பி.எல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மீண்டும் ஆடினால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இவர் சென்னை அணிக்காக 16 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பேட்டிங்கில் வெறும் 14 ரன்கள் மட்டுமே இவரால் சேர்க்க முடிந்தது.

விருத்திமன் சாஹா

சாஹா, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே களமிறங்குகிறார். பெரிதாக லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் இவர் ஈடுபடுவதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் 14 போட்டிகளில் 144 ரன்கள் அடித்துள்ளார். இவர் பவர்பிளேவில் அதிரடி காட்டக் கூடிய வீரர். மேலும் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுவார். சி.எஸ்.கே நிர்வாகம் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்பும். ஏற்கனவே சென்னை அணிக்காக ஆடிய 37 வயதாகும் விருத்திமன் சாஹாவை வாங்க வாய்ப்பு உள்ளது.