ஒரே ஒருமுறைகூட சர்வதேச ஐசிசி கோப்பையை வென்றிடாத பிரபல கிரிக்கெட் கேப்டன்கள்

0
615
Mahela Jayawardene and Ab de Villiers

கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் சர்வதேச அளவில் ஒரு அணியை தலைமை தாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. வென்றால் அத்தனை பேரும்,பெருமையும் கேப்டனுக்கு எந்த அளவுக்கு வருமோ, அதைவிட பலமடங்கு விமர்சனமும், குற்றச்சாட்டும் தோல்வி அடைவதன் மூலமாக அந்த கேப்டனுக்கு வந்து சேரும்.

கேப்டன் பதவி அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு வீரருக்கு கிடைத்துவிடாது. அணிக்காக அவரது பங்களிப்பு, பெர்பார்மன்ஸ் என நிறைய விஷயங்களை கணக்கில் வைத்து, அதன் அடிப்படையில் அவருக்கு அந்த கேப்டன் பதவியை அணி நிர்வாகம் வழங்கும்.

அப்படி கிடைக்கப்பட்ட கேப்டன் பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அளவில் நடக்கும் ஐசிசி தொடர்களில் தனது அணிக்காக கோப்பையை பெற்றுத் தருவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. மிகச் சிறப்பாக மற்ற போட்டிகளில் தனது அணியை வழிநடத்தி தொடர் வெற்றிகளை வாங்கிக் கொடுத்த பிரபல கேப்டன்கள் கூட, ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் சொதப்பி இருக்கின்றனர். அப்படி ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிடாத பிரபல கேப்டன்களை பற்றி பார்ப்போம்.

முகமது அசாருதீன்

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்கள் மத்தியில் முகமது அசாருதீன் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். ஒருநாள் போட்டிகளில், இந்திய அணியை ஒன்பது வருடங்கள் வெற்றிகரமாக தொடர்ந்து அசாருதீன் தலைமை தாங்கினார். 147 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கிய அசாருதீன், 47 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.

147 ஒருநாள் போட்டிகளில் இவரது தலைமையில் விளையாடியுள்ள இந்திய அணி 90 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இவருடைய வெற்றி சதவிகிதம் 54.16. இந்திய அணிக்கு 1990 முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கினார். இந்த 9 வருடங்களில் 1992, 1996 மற்றும் 1999ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. இந்த மூன்று உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற வில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

கிரீம் ஸ்மித்

தென்ஆப்பிரிக்க அணியின் தலைசிறந்த வீரராகவும் தலைசிறந்த கேப்டனாகவும் விளையாடிய இவர், மொத்தமாக 109 டெஸ்ட் போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் தென்ஆப்ரிக்க அணியை தலைமை தாங்கியிருக்கிறார். இவரது தலைமையில் 92 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி கண்டுள்ளது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் இவருடைய வெற்றி சதவிகிதம் 64.23. டெஸ்ட் போட்டியிலும் இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இரண்டு முறை தொடர்ச்சியாக டெஸ்ட் மேஸை கைப்பற்றி அசத்தியது.

ஐசிசி நடத்தும் சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி விளையாடியது. அதேபோல ஐசிசி நடத்தும் சர்வதேச உலகக் கோப்பை டி20 தொடரிலும் 2007, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. இதுமட்டுமின்றி ஐசிசியின் சர்வதேச உலக கோப்பை தொடரில் 2007 மற்றும் 2011ம் ஆண்டில் இவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. மொத்தமாக ஏழு முறை ஐசிசியின் சர்வதேச தொடர்களில் இவரது தலைமையில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

ஏபி டிவில்லியர்ஸ்

இந்திய ரசிகர்களால் ஏலியன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு மிகப்பெரிய துவக்கம் தேவை கிடையாது. தென்னாப்பிரிக்க அணியை 103 ஒருநாள் போட்டிகளிலும் 18 டி20 போட்டிகளிலும் ஏபிடி தலைமை தாங்கியிருக்கிறார். இவரது தலைமையில் மொத்தமாக ஐம்பத்தி ஒன்பது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி கண்டுள்ளது. இவருடைய வெற்றி சதவிகிதமும் 60.00 ஆகும்.

ஐசிசியின் சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ஆம் ஆண்டும், ஐசிசியின் சர்வதேச உலக கோப்பை தொடரில் 2015 ஆம் ஆண்டும் இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் அரையிறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. அதேபோல 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இவரது தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை வெல்லாதது குறிப்பிடத்தக்கது.

மஹேல ஜெயவர்தன

இலங்கையை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான இவர் இலங்கை அணியை 38 டெஸ்ட் போட்டிகளிலும், 129 ஒருநாள் போட்டிகளிலும், 19 டி20 போட்டிகளிலும் கேப்டனாக தலைமை தாங்கியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இவருடைய வெற்றி சதவிகிதம் 59.09. அதேபோல டி20 போட்டிகளில் 65.78 வெற்றி சதவிகிதத்தை இவர் வைத்திருக்கிறார்.

இவரது தலைமையில் மொத்தம் மூன்று முறை ஐசிசி சர்வதேச தொடர்களில் இலங்கை அணி விளையாடி இருக்கிறது. 2006ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், 2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரிலும், 2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் இவரது தலைமையில் இலங்கை அணி விளையாடி இருக்கிறது.

இவரது தலைமையில் 2006 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2007 டி20 தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேறாத இலங்கை அணி, 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ்

1980 முதல் 1991 ஆம் ஆண்டு வரை மேற்கு இந்திய தீவுகள் அணியை இவர் தலைமை தாங்கி வந்தார். 50 டெஸ்ட் போட்டிகளிலும் 105 ஒருநாள் போட்டிகளிலும் இவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இவருடைய வெற்றி சதவிகிதம் 54.00 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருடைய வெற்றி சதவீதம் 65.04 ஆகும்.

1980 முதல் 1991 ஆம் ஆண்டுகளில் இவரது தலைமைக்கு எதிராக விளையாட மற்ற அணிகள் பயப்படும் அளவிற்கு தன்னுடைய அணியை மிக சிறப்பாக தலைமை தாங்குவார். துரதிஷ்டவசமாக இவர் மேற்கிந்திய தீவுகள் அணியை தலைமை தாங்கிய அந்த 11 வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே ஐசிசியின் சர்வதேச தொடர் நடைபெற்றது.

1987 ஆம் ஆண்டு நடந்த ஐசிசியின் சர்வதேச உலக கோப்பை தொடரில் இவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. அந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி குரூப் தொடரிலேயே வெளியேறி ஆச்சரியமளித்தது குறிப்பிடத்தக்கது.