கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

490 ரன்கள் இலக்கு.. சாய் சுதர்சன் கையில் இந்திய ஏ அணியின் வெற்றி… சாதிப்பாரா?.. இங்கிலாந்து லயன்ஸ் முன்னிலை

தற்பொழுது இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணியும் இந்தியா ஏ அணியும் மோதிக் கொள்ளும் நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். ஆனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்த முறை பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தியது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கீட்டன் ஜென்னிங்ஸ் 158, கேப்டன் ஜோஸ் போகனன் 125 ரன்கள் குவிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட் இழப்புக்கு 553 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் தரப்பில் மானவ் சுதார் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். தனி ஒரு வீரராக நின்று போராடிய ரஜத் பட்டிதார் 151 ரன்கள் குவித்தார். ஆனாலும் இந்திய அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மூன்றாவது நாளில் ஆறு விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து அதிரடியாக டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு பிரம்மாண்டமான 490 ரன்கள் என்கின்ற பெரிய இலக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 331 ரன்கள் தேவைப்படுகிறது. தற்பொழுது இந்திய அணியிடம் ஆறு விக்கெட் கைவசம் இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 93 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்பொழுது காலத்தில் ஆட்டம் இழக்காமல் சாய் சுதர்சன் 53 ரன்கள் எடுத்து நிற்கிறார். நாளைய போட்டியில் மேற்கொண்டு விளையாடிய சாய் சுதர்சன் இந்தியா ஏ அணியை வெற்றி பெற வைப்பாரா என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது நடந்தால், சீக்கிரத்தில் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்கலாம்.

Published by